மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் இயக்குநர், மூன்று வங்கிகளிடம் 1.5 மில்லியன் வெள்ளி மோசடி செய்ய உதவியுள்ளார்.
சிட் லே என்னும் நிறுவனத்தின் இயக்குநராக 70 வயதான டான் ஆங் பியாங் இருந்தபோது குற்றச்செயலில் ஈடுபட்டார். அவர் 2011ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடையில் நடந்த மோசடிக்கு உதவியாக இருந்தார்.
ஜேசன் பர்குவெட் நிறுவனத்தின் இயக்குநர் ஜேசன் சிம். அவர் டானின் நிறுவனத்திடமிருந்து மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்ததுபோல் போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளார். இதற்கு டானும் உதவி செய்தார்.
போலி ஆவணங்கள் மூலம் ஜேசன் சிம் வங்கிகளிடம் தொழில் ரீதியான கடன்களை வாங்கினார். அதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் ஜேசன் சிம்மின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
ஜேசன் சிம்முக்கு கடந்த பிப்ரவரி மாதம் மூவாண்டுகள் மற்றும் எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 59 வயது சிம் தண்டனை குறித்து மேல்முறையீடு செய்தார், இருப்பினும் அது நிராகரிக்கப்பட்டது.
டான் தம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். டானுக்கு ஓராண்டு மற்றும் 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

