சிங்கப்பூரில் 2023, 2024ஆம் ஆண்டுகளில் தனிநபர் தகவல்களைத் தவறாகக் கையாண்டது, பாதுகாக்கத் தவறியது ஆகியவை தொடர்பில் தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் மொத்தம் $700,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதால் முழுப் பெயர், அடையாள அட்டை எண் (NRIC) போன்ற தனிப்பட்ட தரவுகள் கசிந்தன. இதனால் அந்தத் தரவுகள் தவறாகக் கையாளப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டது.
தேசிய அளவிலான கண்காணிப்பு அமைப்பான தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் (PDPC) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
தனிநபர் தகவலைக் கையாளும் முறை மீதான அமலாக்க நடவடிக்கைகள் இந்த ஆண்டிலும் (2025) தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடையாள அட்டை எண் தொடர்ந்து தனிநபர் தகவலாகக் கருதப்படும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, ஜனவரி 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
சிங்கப்பூர் சட்டங்களின்கீழ், அடையாள அட்டை எண்களைச் சேகரிக்கும் அமைப்புகளுக்கு அவற்றைப் பாதுகாக்கும் கடமை இருப்பதாக அவர் கூறினார்.
ஜனவரி 7, 8 ஆம் தேதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய 50க்கு மேற்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் சேகரித்திருந்த அடையாள அட்டை எண்கள் கடந்த டிசம்பர் மாதம் கசிந்ததில் அதன் புதிய ‘பிஸ்ஃபைல்’ இணையவாசலின் பொதுத்தேடல் வசதி மூலம் அடையாள அட்டை எண்களைப் பார்வையிட முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவத்தை அடுத்து, அடையாள அட்டை எண்களை மறைத்து வெளியிடும் முறையை நிறுத்தப்போவதாகவும் அரசாங்கத் துறையிலிருந்து அதைத் தொடங்கவிருப்பதாகவும் அமைச்சு கூறியது.
சென்ற ஆண்டு (2024), தனிநபர் தகவல்களைத் தவறாகக் கையாண்டதன் தொடர்பில் தனிநபர்கள், அமைப்புகள் என மொத்தம் 12 தரப்புகள் மீது, தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவற்றில் எட்டுத் தரப்புகள் அடையாள அட்டை எண்களை வெளியிட்டதாகவும் மற்றவை தொலைபேசி எண், சம்பள விவரம், கடன் அட்டை விவரம் போன்றவற்றை வெளியிட்டதாகவும் கூறப்பட்டது.
2023ஆம் ஆண்டும் 12 தரப்புகள், பிறந்த தேதி, முழுப் பெயர், வங்கி விவரம், அடையாள அட்டை எண் போன்றவற்றை வெளியிட்டதாகக் கூறப்பட்டது.
பெரும்பாலான நிறுவனங்கள் உரிய மறைச்சொல் கொள்கைகளைப் பின்பற்றத் தவறியதால்தான் இத்தகைய தகவல் கசிவு ஏற்பட்டதாகவும் மற்றவற்றில் இணையப் பாதுகாப்பு அம்சங்களில் பழைய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது காரணம் என்றும் கூறப்பட்டது.
அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் போதிய அளவில் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

