காப்பிக்கடை பெண் ஊழியரைத் தாக்கியதாக 71 வயது முதியவர் கைது

காப்பிக்கடை பெண் ஊழியரைத் தாக்கியதாக 71 வயது முதியவர் கைது

2 mins read
9243dd87-bacc-4775-812d-658d5f78e33b
முரண்டுபிடிக்கும் முதியவரைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகள். - படம்: ஸ்டோம்ப் காணொளி

காப்பிக்கடையில் பணியாற்றிய பெண் ஊழியரைத் தாக்கியதாகக் கூறப்படும் 71 வயது முதியவர் மனநலச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 15ஆம் தேதி மாலை நான்கு மணியளவில் புளோக் 261 சிராங்கூன் சென்ட்ரல் டிரைவில் உள்ள காப்பிக்கடையில் இந்தச் சம்பவம் நடந்தது.

ஸ்டோம்ப் தளத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளியில், எதிர்த்துப் போராடும் முதியவரை நான்கு காவல்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்துவது தெரிகிறது.

அதிகாரிகள் தன்னை அடித்ததாகவும் தனது பணத்தைத் திருடியதாகவும் ஹோக்கியன், மாண்டரின் மொழிகளில் அவர் கத்துகிறார். ஆனால், அப்படி எதுவும் நிகழ்ந்ததாகக் காணொளியில் தெரியவில்லை.

காப்பிக்கடையில் உதவியாளராக பணிபுரியும் 22 வயது பெண் ஊழியரை அவர் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக ஷின்மின் டெய்லி தெரிவிக்கிறது.

‘சு’ என்று அழைக்கப்படும் அந்தப் பெண், நடந்தவற்றை சீன நாளேட்டிடம் விவரித்துள்ளார்.

அந்த முதியவர், “நீ இங்கு இருக்கிறாயா?” என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பெண், “ஆம், இங்கு இருக்கிறேன்” என்று பதிலளிக்கிறார்.

அதன்பிறகு அந்த முதியவர் தன்னை நோக்கி வந்து காப்பிக் கடையிலிருந்து கையைப் பிடித்து வெளியே இழுத்ததாக சு கூறுகிறார். அப்போது அவரது முதலாளி தலையிட்டு உதவுகிறார்.

இந்தச் சம்பவம் பற்றி தகவல் கிடைத்து அங்கு சென்ற காவல்துறையினர் 71 வயது முதியவரை மனநலச் சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர். அவரைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தபோது அவருக்கு சில சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அவர், சுயநினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஒருவர், தன்னுடைய உயிருக்கோ அல்லது மற்றவருக்கோ ஆபத்தாக இருப்பதாக அதிகாரிகள் நினைத்தால் அவரை மனநலச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்க முடியும்

பின்னர் மருத்துவச் சோதனைகளுக்காக மருத்துவரிடம் அவர் அனுப்பி வைக்கப்படுவார்.

குறிப்புச் சொற்கள்