தன் நிறுவனத்தின் மூன்று வங்கிக் கணக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மில்லியன் கணக்கில் பணம் எவ்வாறு வந்தது என்பது தனக்குத் தெரியாது என நீதிமன்றத்தில் 58 வயது ஸின் நுவெ நுயுன்ட் ஒப்புக்கொண்டார்.
தன் கணவரின் பால்ய நண்பனான மியன்மார் நாட்டு ஆடவர் ஒருவருடன் சேர்ந்து, சிங்கப்பூரில் கட்டணச் சேவை வழங்கும் வர்த்தகம் ஒன்றை உரிமமின்றி நடத்தியதன் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளை மார்ச் 5ஆம் தேதி ஒப்புக்கொண்டார் அந்தப் பெண்.
சிங்கப்பூரரான அந்தப் பெண்ணுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். அவருக்கு $170,000க்கும் அதிகத் தொகை தரகுப்பணமாகக் கிடைத்தது என்று கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக 2020, 2021 ஆண்டுகளில் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் $531 மில்லியன் அமெரிக்க டாலர் (S$711 மில்லியன்) போடப்பட்டது.
ஆஸ்திரேலிய முதலீட்டு மோசடி ஒன்றில் சிக்கிக்கொண்ட ஒருவர், சிங்கப்பூரின் நிறுவனங்களின் கீழ் இருந்த பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு $1.8 மில்லியன் அமெரிக்க டாலரை மாற்றியது தொடர்பாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தபோது குற்றங்கள் பற்றித் தெரியவந்தது.