சட்டவிரோத குதிரைப் பந்தயப்பிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 73 பேர்மீது விசாரணை

1 mins read
dfa3dc63-80af-4b4b-8d25-6154a4cf8751
யூனோஸ் கிரசெண்ட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூர் குதிரைப்பந்தய மன்றம் அக்டோபர் 5ஆம் தேதி மூடப்பட்டதை அடுத்து, சட்டவிரோதக் குதிரைப்பந்தயப் பிடிப்புக்கு எதிராக முதன்முதலில் பேரளவில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 73 பேர்மீது விசாரணை நடந்துவருகிறது.

ஆரம்பகட்ட விசாரணையில் 52 வயதுக்கும் 93 வயதுக்கும் இடைப்பட்ட 70 ஆண்களும் மூன்று பெண்களும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பந்தயம் கட்டுவதைக் கையாள்பவர், பந்தயம் கட்டுவதை இருதரப்பினரிடையே ஏற்படுத்துபவர், பந்தயம் கட்டுபவர் என இந்த 73 பேரும் சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமலாக்க நடவடிக்கை பாண்டா ஸ்திரீட், தெலுக் பிளாங்கா கிரெசண்ட், கிங் ஜார்ஜஸ் அவென்யு, ஸ்மித் ஸ்திரீட், தேபான் கார்டன்ஸ் ரோடு, தோ பாயோ, அங் மோ கியோ, ஈசூன், அல்ஜுனிட் கிரெசண்ட், யூனோஸ் கிரெசண்ட், தெம்பனிஸ், மார்சிலிங் ரோடு, பூன் லே பிளேஸ் ஆகிய பல இடங்களில் அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது.

ரொக்கமாக $43,000க்கும் அதிகமான தொகை, கைப்பேசிகள், குதிரைப்பந்தயத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விளையாட்டுகள், லாட்டரி, குதிரைப்பந்தயம் ஆகியவற்றுக்கு சிங்கப்பூரில் சட்டரீதியாக இயங்கும் ஒரே நிறுவனம், சிங்கப்பூர் பூல்ஸ். இதைத் தவிர வேறுவகையான சட்டவிரோதச் சூதாட்டத்தைத் தவிர்த்துவிடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்