மின்சக்திக் கட்டுப்பாட்டுக் கருவியில் அதிக வெப்பம் ஏற்படும் கோளாற்றால் சிங்கப்பூரில் ‘ஹியுண்டே அவான்டெ ஹைபிரிட்’ வகையைச் சேர்ந்த 731 கார்கள் சோதனைக்காக திரும்பப் பெறப்படுகின்றன.
‘ஹைபிரிட்’ என்பது தேவைப்படும்போது ஓட்டுநர்கள் பெட்ரோலையும் மின்சக்தியையும் இருவழிகளிலும் மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளும் செயல்முறையைக் குறிப்பதாகும்.
அந்த வாகனங்களில் திடீரென தீப்பிடிக்கும் அபாயத்தைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
2024 அக்டோபர் 22ஆம் தேதி முதல் 2026 ஜனவரி 7ஆம் தேதி வரையில் தயாரிக்கப்பட்ட அவ்வகை வாகனங்கள் சோதனைகளுக்காக சிங்கப்பூரில் திரும்பப் பெறப்படுகின்றன.
2024 முதல் 2026 ஜூலை வரை இங்கு பதிவுசெய்யப்பட்ட 917 ஹியுண்டே ஹைபிரிட் கார்களில் 80 விழுக்காட்டு வாகனங்களில் அந்தப் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்த வாகனங்களின் மின்சக்திக் கட்டுப்பாடுக் கருவியில் வெப்பம் அதிகரிக்கும்போது அவற்றை வழக்கமாக இயக்க முடியாது. ஓட்டுநரின் பார்வையில் படும்படி எச்சரிக்கை சமிக்ஞைகள் வாகனத்தில் வெளிப்படும்.
சில நேரங்களில் வெப்பம் சார்ந்த கோளாறு வாகனத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது என நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. வாகனத்தின் பாகங்கள் தீப்பிடித்தல், உருகுதல் போன்றவை நிகழ்வதை அது குறிக்கும்.
தென்கொரியாவிலிருந்து அவ்வகை வாகனங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் கொமோக்கோ மோட்டார்ஸ் நிறுவனப் பேச்சாளர், வாகனங்களைச் சோதனைக்குத் திரும்பப் பெறும் நடவடிக்கைக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்ததாகத் தெரிவித்தார். வாகனங்களை மீட்டுக்கொள்வதற்கான கடிதங்களும் அதன் ஓட்டுநர்களுக்கென தயார்செய்யப்படுவதையும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவிலும் 54,000 அதே ஹியுண்டே வகை கார்கள் சோதனைக்காக திரும்பப் பெறப்பட்டுள்ளன.


