தீவின் பல வட்டாரங்களில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஐந்து நாள்கள் நடத்திய சோதனைகளில் 74 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுமார் $68,000க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப் போதைப்பொருள்கள் 436 புழங்கிகள் ஒரு வாரம் பயன்படுத்தும் அளவுக்கு இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) இந்த விவரங்களை அறிக்கையில் வெளியிட்டது. அக்டோபர் 13 முதல் 17ஆம் தேதி வரை அங் மோ கியோ, பாலஸ்டியர், கிளமெண்டி, பொங்கோல், உட்லண்ட்ஸ், ஈசூன் போன்ற பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தச் சோதனைகளில் 2,504 கிராம் கெனபிஸ்,158 கிராம் கேட்டமைன், 76 கிராம் ஹெராயின், 73 கிராம் ஐஸ் (மெத்தம்பெட்டமின்), 12 கிராம் எக்ஸ்டசி மற்றும் 40 எரிமின் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுடன் 42 எட்டோமிடைட் கலந்த கேபாட் மின்சிகரெட்டுகளும் உபகரணங்களும் பிடிபட்டன என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.
கைதானவர்களில் 26 வயது மாதும் ஒருவர். அவருடன் அவரது 19 வயது மகளும் கைதாகும்போது உடன் இருந்தார். அவருக்கான பராமரிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
500 கிராமுக்கு மேல் கெனபிஸ் போதைப் பொருள் கடத்துவோருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.