ஈசூனில் உள்ள பாரம்பரியச் சீன மருத்துவ மருந்தகத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் மானபங்கக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
74 வயதான அந்த முதியவர் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 46 வயது பெண்ணை மூன்று முறை மானபங்கம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஹோ கெட் சூங் என்னும் அந்த 74 வயது ஆடவர்மீது திங்கட்கிழமை (செப்டம்பர் 1) மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஹோ, ஈசூன் ரிங் ரோட்டில் உள்ள புளோக் 780ல் சிங் வா மெடிக்கல் ஹால் மருந்தகத்தை நடத்தி வருகிறார்.
அவர் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி 46 வயது பெண்ணை முதலில் மானபங்கம் செய்தார். அதன்பின்னர் இரண்டு முறை ஹோ அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. வழக்கு விசாரணை இம்மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மானபங்கக் குற்றச்சாட்டுக்கும் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி உள்ளிட்டவை விதிக்கப்படும்.
50 வயதைத் தாண்டியதால் ஹோ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவருக்குப் பிரம்படி விதிக்கப்படாது.