வீ. பழனிச்சாமி, இணை ஆசிரியர்
சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு அரசாங்கம் தங்கள் பணிகளிலும் சேவையிலும் சிறந்து விளங்கிய 7,491 பேருக்குத் தேசிய தின விருதுகளை அறிவித்துள்ளது.
அவர்களில் 110 இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிஎம் (BBM) எனும் பொதுச் சேவை நட்சத்திரப் பதக்கம் பெறுவோரில் மூவர் தமிழர்கள். அவர்களில் ஒருவர் சொங் பாங் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் துணைப் பொருளாளரான 60 வயது ஜெயதேவ் உன்னிதன்.
“தேசிய தின விருது, சொங் பாங் அடித்தள சமூகத் தலைவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை உணர்விற்கான அங்கீகாரமாகும். நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் குடியிருப்பாளர்களின் நலனையே முதன்மையாகக் கருதுகிறோம். இந்த விருதை என் சக தொண்டர்களின் சார்பாக ஏற்றுக்கொள்கிறேன். சமூகத்திற்கு சேவை செய்ய எனக்கு உறுதுணையாக இருந்துவரும் என் மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்கிறார் திரு ஜெயதேவ்.
அடுத்தவர், தஞ்சோங் பகார் எவர்ட்டன் பார்க் குடியிருப்பாளர் கட்டமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினரான 70 வயது கே. கணேசன்.
“இந்த விருதைப் பெறுவதில் நான் மிகுந்த பெருமையும் பணிவும் அடைகிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நமது சமூகத்திற்குச் சேவை செய்வது ஓர் ஆழ்ந்த மனநிறைவு தரும் பயணமாக அமைந்துள்ளது. திரு லீ குவான் யூ, திரு கூ சாய் கீ முதல் குமாரி இந்திராணி ராஜா, திரு ஃபூ செஸியாங் வரையிலான நமது தலைவர்களுடனும், அர்ப்பணிப்புள்ள அடித்தளத் தொண்டர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுடனும் இணைந்து பணியாற்றும் பாக்கியம் பெற்றதால், நான் நிறைய கற்றுக்கொண்டேன்,” என்றார் திரு கணேசன்.
பொதுச் சேவை நட்சத்திரப் பதக்கம் பெறும் திருமதி கௌசல்யா தேவி ராமசந்திரா, 85, “புக்கிட் பாஞ்சாங் மக்களுக்கும், பரந்த சமூகத்திற்கும், நிச்சயமாக என் அன்புக்குரிய நாட்டிற்கும் நான் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் இந்த விருதைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
“மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, அவர்களைத் தொகுதியின் ஓர் அங்கமாக உணர வைத்து, தனிநபர்களாகவும் குடும்பங்களாகவும் அவர்களைக் கொண்டாடுவதே எனது நோக்கமாக எப்போதும் இருந்து வந்துள்ளது. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்றார்.
பொது நிர்வாகத்துக்கான தங்கப் பதக்கத்தைப் பெறுபவர்களில் ஒருவர் சிங்கப்பூர் நீதித்துறை ஆணையத்தின் செயலாளர் பி. சிவ சண்முகம். “இந்த விருதை மிகப் பணிவுடன் பெற்றுக்கொள்கிறேன். இந்தச் சிறப்புரிமையை, பொதுச் சேவையில் உள்ள எனது அர்ப்பணிப்புள்ள சக ஊழியர்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன். சிங்கப்பூருக்கும் சிங்கப்பூர் மக்களுக்கும் சேவை ஆற்றுவதில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, எனக்குத் தொடர்ச்சியான உத்வேகத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது,” என்று திரு சிவ சண்முகம் கூறினார்.
பொது நிர்வாகத்துக்கான வெள்ளிப் பதக்கத்தைப் பெறுகிறார் உட்லண்ட்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகர் இணைப் பேராசிரியர் மோகன் திருச்சிற்றம்பலம்.
“இந்த விருது, இதைச் சாத்தியமாக்கிய ஒட்டுமொத்த பொதுச் சுகாதாரச் சமூகத்துக்கும் உரியது. இத்தகைய அர்ப்பணிப்புள்ள குழுக்களுடன் பணியாற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன். மேலும், தேசிய தின விருதுகளைப் பெற்ற எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்,” என்கிறார் பேராசிரியர் மோகன்.
ஆசிரியர்கள் இருவர் பாராட்டுப் பதக்கம் (The Commendation Medal) பெறுகிறார்கள். ஒருவர், பார்ட்லீ உயர்நிலைப் பள்ளியின் மூத்த ஆசிரியர் லூயிஸ் ஐசக் குமார்.
42 வயதாகும் அவர், “கல்வித்துறையில் கடந்த 16 ஆண்டுகாலம் சேவையாற்றி, மாணவர்களிடையே தமிழ்மொழியை வாழும் மொழியாக நிலைபெறச் செய்ய மேற்கொண்ட முயற்சிகளையும் சக ஆசிரியர்களின் பணித்திறனை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகளையும் அங்கீகரிக்கும் வண்ணம் இந்த விருது அமைகிறது. “குறிப்பாக, பள்ளி வேலைகளில் மட்டுமன்றி சமூகத் தொண்டுகளிலும் ஈடுபட ஆக்கமும் ஊக்கமும் அளித்து, வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு சவாலிலும் என்னுடன் துணை நின்ற என் மனைவிக்கும் மகன் ஏட்ரியனுக்கும், மகள் ஃபியோனாவுக்கும் இவ்விருதை சமர்ப்பிக்கிறேன்,” என்றார் திரு லூயிஸ்.
பாராட்டுப் பதக்கம் பெறும் மற்றொருவர், தெம்பனிஸ் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டுத் தலைவரான 39 வயது நல்லு தினகரன்.
விருது பெற்றது குறித்துக் கருத்துரைத்த திரு தினகரன், “தெம்பனிஸ் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் நலனில் நான் ஆற்றிய பங்கிற்கு தேசிய தின விருது பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். விரைவாக மாறிவரும் இந்த நவீன உலகில், மாணவர்களுக்குப் பாடக் கல்வியை மட்டும் தருவது போதாது. விழுமியம் சார்ந்த கல்வியை நம் சிங்கப்பூர் மாணவர்களுக்குத் தொடர்ந்து வழங்குவதற்கு இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கமாக அமைகிறது,” என்றார்.
பொதுச் சேவை பதக்கம் பெற்றவர்களுள் மூவர் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர்கள். அவர்களில் முதலாமவர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் செயலாளரான 66 வயது சதிஷ் அப்பு.
“இந்து அறக்கட்டளை வாரியத்தில் நான் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி வழங்கப்படும் இவ்விருதைப் பெறுவதில் நான் பெருமையும் மிகுந்த பணிவும் அடைகிறேன். என் குடும்பத்தினரின் சிறந்த ஆதரவால் சாத்தியமான எனது இந்தப் பயணம் முழுவதும், என்னுடன் இணைந்துப் பணியாற்றிய அற்புதமான குழுவினருக்கும் வழிகாட்டிகளுக்கும் இவ்விருதை அர்ப்பணிக்கிறேன்,” என்று திரு சதிஷ் தெரிவித்தார்.
அடுத்தவர், போதைப்பொருள் மறுவாழ்வு மையங்கள் மற்றும் உள்ளிழுப்பான் போதைப்பொருள் தடுப்பு மையங்களுக்கான பார்வையாளர் குழுத் தலைவர் எஸ். தேவேந்திரன்.
ஸ்ரீ நாராயண மிஷன் மூத்தோர் இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான 64 வயது திரு தேவேந்திரன், “சிங்கப்பூர் சிறைத்துறையுடன் இணைந்திருப்பதிலும், குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் பணியில் ‘வாழ்வின் தலைவர்களுக்கு’ ஆதரவளிப்பதிலும் நான் பெருமை கொள்கிறேன். அவர்களின் பணி கடினமானது, பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாதது. ஆனால், பாதுகாப்பான மற்றும் கருணையான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு அது இன்றியமையாதது,” என்றார்.
இறுதியாக, பொதுச் சேவை பதக்கம் பெறுபவர் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவரான 56 வயது தனபால் குமார்.
“இந்த தேசிய தின விருது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழாசிரியர்களின் மேம்பாட்டிற்கும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆற்றிவரும் சீரிய பங்களிப்பிற்குக் கிடைத்த விருதாகவே கருதுகிறேன். மேலும், முனைப்போடு செயற்படவும் தமிழ்மொழியை வாழும் மொழியாக நிலைபெறச் செய்வதிலும் தமிழாசிரியர்களுக்கான வளர்ச்சிக்காக மேலும் உறுதியோடு செயற்படவும் ஊக்கம் தருவதாக உள்ளது. ஒரு தொழிற்சங்கவாதியாக இவ்விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி,” என்றார் திரு குமார்.


