அரசாங்க அதிகாரிபோல நடித்த மோசடிக்காரர்களிடம் 75 வயது மூதாட்டி ஒருவர் 213,000 வெள்ளியை இழந்துள்ளார். மேலும் 500,000 வெள்ளியை இழக்கவிருந்த நேரத்தில் வங்கி அதிகாரி ஒருவர் தலையிட்டு அவரைக் காப்பாற்றியிருக்கிறார்.
இந்த மோசடியை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியுடன் சேர்ந்து காவல்துறையின் மோசடித் தடுப்பு நிலையம் முறியடித்ததாக ஆகஸ்ட் 28ஆம் தேதி காவல்துறையின் அறிக்கை குறிப்பிட்டது.
வழக்கத்திற்கு மாறாக பரிவர்த்தனைகள் நடைபெறுவதை அறிந்த வங்கி அதிகாரி, உரிய நேரத்தில் செயல்பட்டு மோசடிக்காரர்களின் ஏற்பாட்டிலிருந்து பணத்தை மீட்க உதவியுள்ளார்.
கடந்த ஜூலையில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் அதிகாரி பேசுவதாகக் கூறி அந்த முதிய மாதுக்கு அழைப்பு வந்தது.
அவரது கடன் அட்டை மூலம் அங்கீகாரமற்ற பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக அந்த நபர் கூறினார்.
பின்னர், அவருக்கு உதவி செய்வதற்காக சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அதிகாரியிடம் அழைப்பை மாற்றுவதாக மோசடிக்காரர் கூறியுள்ளார்.
தொலைபேசியில் தொடர்ந்து பேசிய மற்றொருவர், ஜூலை 26, 29 தேதிகளில் மற்ற வங்கிக் கணக்குகளுக்கு முதலீடுகளை விற்று, 213,000 வெள்ளிக்கு மேற்பட்ட தொகையை மாற்றி விடுமாறு கூறினார்.
அதைப் பின்பற்றி மூதாட்டி பணத்தை மாற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் 500,000 வெள்ளி மதிப்புள்ள முதலீடுகளை விற்று மாற்றுமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் வழக்கத்திற்கு மாறாக வெளியே பல வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுவதை அறிந்த வங்கி அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த அதிகாரி, வங்கியின் மோசடித் தடுப்புக் குழுவிடம் தெரியப்படுத்தினார். அக்குழு, காவல்துறையின் மோசடித் தடுப்பு நிலையத்துடன் தொடர்புகொண்டதால் 500,000 வெள்ளி மாற்றப்படுவது வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் முதலில் மாற்றப்பட்ட 213,000 வெள்ளியை மீட்க முடியவில்லை.
இந்நிலையில் அவசரமாக காவல்துறையின் உதவி தேவைப்பட்டால் 999 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.