சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையத்துக்கான இணைப்பை மேம்படுத்த ஏறத்தாழ $757 மில்லியன் மதிப்பிலான கட்டுமான ஒப்பந்தத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியுள்ளது.
சிஇஎஸ்எஸ்டிசி, கேடிசி சிவில் எஞ்ஜினியரிங் நிறுவனங்களின் கூட்டு முயற்சிக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமையன்று (மே 26) வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாங்கி தெற்குப் பகுதி இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் இப்பணிகள் மூலம் சீலின் அவென்யூ, ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலை, தானா மேரா கோஸ்ட் சாலை, சாங்கி கோஸ்ட் வாக் ஆகிய பகுதிகளில் சாலைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன.
இதன்கீழ் புதிய மேம்பாலச் சாலைகள், சுரங்கப்பாதைகள், நிலத்துக்கு அடியில் அமைக்கப்படும் நடைபாதைகள் ஆகியவை வடிவமைத்துக் கட்டப்படவுள்ளதுடன், தற்போதுள்ள சாங்கி விமான நிலையக் கால்வாயும் விரிவுபடுத்தப்படும்.
இந்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையும்போது, ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலை, தீவு விரைவுச்சாலை, சீலின் அவென்யூ ஆகியவற்றிலிருந்து ஐந்தாம் முனையத்துக்கு நேரடித் தொடர்பு கிடைப்பதுடன், சாங்கி கிழக்கு வட்டாரத்துக்கான போக்குவரத்து மேலும் சுமுகமாக அமையும்.
இவற்றுடன், சீலின் அவென்யூ மற்றும் தானா மேரா கோஸ்ட் சாலைகளில் புதிய மிதிவண்டிப் பாதைகளும் பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டிகளின் பயன்பாட்டுக்காக ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலைப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட நிலத்துக்கு அடியில் அமைக்கப்படும் நடைபாதைகளும் அமைக்கப்படவுள்ளன.
இந்த பிரம்மாண்ட கட்டுமானப் பணிகளுக்காக ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலை, தீவு விரைவுச்சாலை, தானா மேரா கோஸ்ட் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளதால், அதுகுறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கி, 2034ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்தப் பணிகளையும் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

