2025 முற்பாதியில் கட்டுமானத் துறையில் 76 உயிரிழப்புகள், படுகாயங்கள்

2025 முற்பாதியில் கட்டுமானத் துறையில் 76 உயிரிழப்புகள், படுகாயங்கள்

2 mins read
6330d1e5-9f96-47a4-b4e2-3318ccbc7eea
இவ்வாண்டு முற்பாதியில் கட்டுமானத் துறையில் உயிரிழப்புகள், படுகாயங்கள் தொடர்பில் 76 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

இவ்வாண்டு முற்பாதியில், கட்டுமானத் துறையில் உயிரிழப்புகள், படுகாயங்கள் தொடர்பான 76 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது, 2024ன் இதே காலகட்டத்தில் பதிவான 81 சம்பவங்களைவிட ஐந்து குறைவு.

மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் இத்தகவலைத் தெரிவித்தார். சாங்கி விமான நிலையம், மரினா பே சேண்ட்ஸ் போன்ற பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தொழில்துறையினர் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஆர்ச்சர்ட் ஹோட்டலில் சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் சங்கமும் பணியிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்புத் தலைமைத்துவக் கருத்தரங்கில் திரு தினேஷ் புதன்கிழமை (செப்டம்பர் 10) பேசினார்.

ஆர்ச்சர்ட் ஹோட்டலில் பாதுகாப்புத் தலைமைத்துவக் கருத்தரங்கில் திரு தினேஷ் வாசு தாஸ் புதன்கிழமை (செப்டம்பர் 10) பேசினார்.
ஆர்ச்சர்ட் ஹோட்டலில் பாதுகாப்புத் தலைமைத்துவக் கருத்தரங்கில் திரு தினேஷ் வாசு தாஸ் புதன்கிழமை (செப்டம்பர் 10) பேசினார். - படம்: சாவ்பாவ்

காயம் தொடர்பான முழுமையான புள்ளிவிவரங்கள் பொதுவாக மனிதவள அமைச்சின் பணியிடப் பாதுகாப்பு, சுகாதார வருடாந்தர அறிக்கையில் வெளியிடப்படுகின்றன.

கட்டுமான நிறுவனங்கள் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 21 வரை தங்கள் சொந்த பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள பணியிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் ஒரு திட்டத்தைத் தொடங்கவுள்ளதாக திரு தினேஷ் அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ், மேலாளர்கள் கட்டுமானத் திட்டம் இடம்பெறும் இடங்களுக்குச் சென்று அபாயங்களைக் கண்டறிந்து பாதுகாப்பான நடைமுறைகளை வலுப்படுத்துவார்கள்.

இந்தத் திட்டம், வருமுன் காப்பதற்கும் விழிப்புணர்வுக்கும் முக்கியத்துவம் அளிப்பதன் மூலமும் வர்த்தகச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், தொழில்துறை பங்குதாரர்களிடையே பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதன் மூலமும் பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது என்று திரு தினேஷ் கூறினார்.

நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வைக்கவும் பணியிடப் பாதுகாப்பு நடைமுறைகளின் நோக்கம் குறித்து ஊழியர்களுடன் கலந்துரையாடவும் நிறுவனங்களைத் திரு தினேஷ் ஊக்குவித்தார்.

மேலும், சிறந்த நடைமுறைகளையும் வளங்களையும் தொழில்துறையில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு நிறுவனங்களிடம் அவர் வலியுறுத்தினார்.

2024 செப்டம்பரில் தொடங்கப்பட்ட பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தூதர் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் திரு தினேஷ் பேசினார். இரண்டாவது தொகுப்பாக 19 தூதர்கள் இணைந்துள்ளதால், தூதர்களின் மொத்த எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஒப்பந்ததாரர்களும் துணை ஒப்பந்ததாரர்களும், குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தங்களின் பணிக்காக முறையாக அங்கீகரிக்கப்பட்டு வெகுமதி அளிக்கப்படுவதை இந்தத் தூதர்கள் உறுதிசெய்வார்கள்.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானத் துறைபாதுகாப்புகாயம்உயிரிழப்பு