தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்புக்குச் சமர்ப்பணமாக 77 சுகாதாரப் பராமரிப்பு மனிதநேய விருதுகள்

3 mins read
06618bae-7ff4-4060-b6d7-5f20d1c8efa6
இவ்வாண்டின் சுகாதாரப் பராமரிப்பு மனிதநேய விருதுகளை வென்ற 16 குழுக்களில் ஒன்று, தேசிய தொற்றுநோய் நிலையத்தின் ‘கிளினிக் ஜே’. அதன் மூத்த தாதிமை மேலாளர் இம்ரானா பானு (இடமிருந்து இரண்டாவது), அவ்விருதை அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து (நடுவில்) பெற்றார். - படம்: எம்ஓஎச் ஹோல்டிங்ஸ்
multi-img1 of 2

இறுதிகட்டப் பராமரிப்பிலிருக்கும் (palliative care) நோயாளிகளுடன் மரணத்தை எதிர்நோக்கும் வேதனையைப் பகிர்ந்து, அவர்களது இறுதிப் பயணம்வரை பக்கபலமாக இருந்துவருகிறார் மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையின் தாதிமை மேலாளர் நரிந்தர்ஜீத் கோர், 62.

45 ஆண்டுகளாகத் தாதியாகப் பணிபுரிந்துவரும் அவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டோவர் பார்க் ஹாஸ்பிஸ் ஆகியவற்றில் பணியாற்றியதிலிருந்து ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இறுதிகட்டப் பராமரிப்புக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

“மரணத்தை எதிர்நோக்கும் நோயாளிகள் அதை ஏற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படுவர். அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆறுதல்படுத்துவேன்.

“இறக்கும்போது அவர்களது ஈமச்சடங்குக்குச் சென்று அக்குடும்பங்கள் நிறைவை நாட ஆதரிப்பேன்,” என்கிறார் நரிந்தர்ஜீத். இளம்பருவத்திலேயே தன் பெற்றோரை இழந்த அவருக்கு, அந்த வலியை உணரமுடிகிறது.

நோயாளிகள் தம் இறுதி மூச்சின்போது வீட்டிலிருக்கத்தான் விரும்புவர். ஆனால் சில சமயம் குடும்பத்தினரால், அவர்கள் இறப்பதைப் பார்க்கமுடிவதில்லை. அதனால், மருத்துவமனையிலேயே அவர்களுக்கு நல்ல பராமரிப்பை வழங்குகிறோம்.
மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையின் தாதிமை மேலாளர் நரிந்தர்ஜீத் கோர், 62. 

30க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அவர் புற்றுநோயியல் (oncology), ரத்தவியல் (haematology) துறைகளில் பணிபுரிந்துவருகிறார். தற்போது 50க்கும் மேற்பட்ட தாதிகளை ஒரு தாயாக அவர் வழிநடத்துகிறார். தம் சொந்த நேரத்தில் பல்வேறு அமைப்புகள், வழிபாட்டு இடங்களுக்கும் சென்று சுகாதார விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்துகிறார்.

அவரது அன்புள்ளத்துக்காக அவருக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 17) சுகாதாரப் பராமரிப்பு மனிதநேய விருதை (Healthcare Humanity Award) அதிபர் தர்மன் சண்முகரத்னம் வழங்கினார்.

‘பரிவு’ பிரிவில், இவ்வாண்டின் சுகாதாரப் பராமரிப்பு மனிதநேய விருதை அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து பெற்றார் மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையின் தாதிமை மேலாளர் நரிந்தர்ஜீத் கோர், 62. 
‘பரிவு’ பிரிவில், இவ்வாண்டின் சுகாதாரப் பராமரிப்பு மனிதநேய விருதை அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து பெற்றார் மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையின் தாதிமை மேலாளர் நரிந்தர்ஜீத் கோர், 62.  - படம்: எம்ஓஎச் ஹோல்டிங்ஸ்

நரிந்தர்ஜீத்தைப் போல் பொது, தனியார் சுகாதாரத் துறைகளில் மகத்தான சேவைபுரிந்த 61 தனிநபர்களுடன் 16 குழுக்களும் இவ்வாண்டு இவ்விருதைப் பெற்றன.

‘எம்ஓஎச் ஹோல்டிங்ஸ்’ இவ்விருதுகளுக்கு ஏற்பாடு செய்தது.

‘சார்ஸ்’ தொற்றுநோய்க்கு எதிராகப் போராடியவர்களைக் கெளரவித்த 2003ஆம் ஆண்டின் ‘தைரியம்’ விருதுகளின் தொடர்ச்சியாக, 2004ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

சுகாதாரத் துறையினர் மட்டுமல்லாது, சமூகப் பராமரிப்பில் சிறந்து விளங்குவோருக்கும் 2016 முதல் இவ்விருது அளிக்கப்படுகிறது.

தைரியம், பரிவு, தன்னலமின்மை, மீள்திறன், குழுவுணர்வு என்ற நெறிகள் விருதுகளின் வெவ்வேறு பிரிவுகளாக இவ்வாண்டு அறிமுகமாயின.

‘குழுவுணர்வே எங்களின் உந்துசக்தி’

தேசிய தொற்றுநோய் நிலையத்தின் ‘கிளினிக் ஜே’ குழு விருதை வென்றது.
தேசிய தொற்றுநோய் நிலையத்தின் ‘கிளினிக் ஜே’ குழு விருதை வென்றது. - படம்: ரவி சிங்காரம்
தேசிய தொற்றுநோய் நிலையத்தின் ‘கிளினிக் ஜே’யின் மூத்த தாதிமை மேலாளர் இம்ரானா பானு கிதர் முகமது, 39.
தேசிய தொற்றுநோய் நிலையத்தின் ‘கிளினிக் ஜே’யின் மூத்த தாதிமை மேலாளர் இம்ரானா பானு கிதர் முகமது, 39. - படம்: ரவி சிங்காரம்

இவ்வாண்டு விருது வென்ற 16 குழுக்களில் ஒன்று தேசிய தொற்றுநோய் நிலையத்தின் ‘கிளினிக் ஜே’. அதன் சார்பாக அதிபரிடமிருந்து விருதைப் பெற்றார் அதன் மூத்த தாதிமை மேலாளர் இம்ரானா பானு கிதர் முகமது, 39.

“சிங்கப்பூரில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு கிளினிக் ஜே சிகிச்சையளிக்கிறது. குரங்கம்மை, கொவிட்-19, தட்டம்மை போன்ற தொற்றுநோய்ப் பரவல்கள் ஏற்படும்போது நாங்கள் உடனடியாக எதிர்முயற்சிகளில் இறங்குவோம்,” என்றார் இம்ரானா.

நோய்த்தொற்றுப் பரவல்களின்போது தம் சொந்த நேரத்தையும் ஆரோக்கியத்தையும் தியாகம் செய்யும் இவர்கள் தொடர்ந்து நோய்க்கு எதிராகப் போராட வழிவகுப்பதுதான் குழுவுணர்வு.

“தாதிமைத் துறையில் மன உளைச்சல் சற்று கூடுதலாகத்தான் இருக்கும். கொவிட்-19 காலத்தில் அன்றாடம் வெகு நேரம் பணியாற்றினோம். ஆனால், குழு சோர்வடையாமல் இருக்கவேண்டும் என்பதற்காக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வோம். தாதிகள் நலமாக இருப்பதால் நோயாளிகளின் மனநலனும் மேம்படுகிறது.

“எங்கள் அன்பினால்தான் தங்களால் சிகிச்சைக்கு வர முடிவதாகப் பலரும் கூறுகின்றனர்,” என மனநிறைவோடு கூறினார் கிட்டத்தட்ட 35 பேர் கொண்ட ‘கிளினிக் ஜே’யை வழிநடத்தும் இம்ரானா.

இதுவரை குழுவாக, தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் குழு அங்கீகார விருதுகளை இம்ரானா மூன்று முறை வென்றுள்ளார். தனிநபராக தேசிய தின விருதுகளிலும் அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்