2023ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் போதைப்பொருள் அல்லது எட்டோமிடேட் பயன்பாடு தொடர்புடைய 77 சாலை விபத்துகள் நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவற்றில் 25 சம்பவங்கள் போதைப்பொருள் உட்கொண்டதால் ஏற்பட்டவை என்றும் எஞ்சியவை எட்டோமிடேட் பயன்பாட்டுடன் தொடர்புடையவை என்றும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் தெரிவித்தார்.
போக்குவரத்து காவல்துறையின் நிலையான நெறிமுறையின் ஒரு பகுதியாக, சாலை விபத்துகளில் தொடர்புடைய வாகன ஓட்டிகளிடம் மின்சிகரெட் அல்லது போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்படுகிறதா எனப் பாசிர் ரிஸ் - சாங்கி குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி வேலரி லீ கேள்வி எழுப்பினார்.
பிப்ரவரி 3ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் திருவாட்டி லீ எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்தபோது அவர் மேற்கூறியவாறு கூறினார்.
மேலும், சாலை விபத்து ஏற்பட்டால், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநரிடம் சோதனை நடத்தப்படும் என்றார் அவர்.
அப்போது வாகன ஓட்டுநர் போதைப்பொருள் அல்லது எட்டோமிடேட் உட்கொண்டதாகச் சந்தேகம் எழுத்தால், அவருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
‘கேபாட்’ என அழைக்கப்படும் மின்சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் போதைப் பொருள்களில் ஒன்று எட்டோமிடேட்.
சிங்கப்பூரில் மின்சிக்ரெட்டுகளைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் மின்சிகரெட் விற்பனையாளர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 15 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.
கடந்த ஆண்டில், போதைப்பொருள், மின்சிகெரெட்டுகள் தொடர்புடைய சாலை விபத்துகள் நிறைய நடந்ததாகக் கூறப்படுகிறது.

