1976ஆம் ஆண்டில் அல்லது அதற்கு முன்னர் பிறந்த 782,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு டிசம்பர் 8ஆம் தேதிக்குள் 1,500 வெள்ளி வரையிலான மத்திய சேம நிதி (மசேநி) நிரப்புதொகை வழங்கப்படவுள்ளது.
தங்களது ஓய்வுக்காலச் சேமிப்பை அதிகரிப்பதில் சவால்களை எதிர்நோக்கக்கூடிய மூத்த குடிமக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், அந்த நிரப்புதொகை வழங்கப்படுவதாக மனிதவள அமைச்சும் மத்திய சேம நிதிக் கழகமும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
மொத்தம் 1.04 பில்லியன் வெள்ளி மதிப்பிலான அந்த மத்திய சேம நிதி நிரப்புதொகை குறித்து இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அத்தொகையைப் பெறுவதற்கு, பயனர்கள் 1976ஆம் ஆண்டில் அல்லது அதற்கு முன்னர் பிறந்த, சிங்கப்பூரில் வசிக்கும் சிங்கப்பூரர்களாக இருக்க வேண்டும்.
அத்துடன், 2025 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி அவர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- 2026ஆம் ஆண்டுக்கான அடிப்படை ஓய்வுக்காலத் தொகையான $110,200க்கும் குறைவான மத்திய சேமநிதி ஓய்வுக்காலச் சேமிப்பைக் கொண்டிருக்கவேண்டும்;
- ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளுக்கு உரிமையாளராக இருக்கக்கூடாது;
- $31,000க்கு அதிகமான வருடாந்தர மதிப்புடைய குடியிருப்பில் வசித்திருக்கக் கூடாது.
வழங்கப்படும் உதவித் தொகை, பயனர்களின் மத்திய சேம நிதி ஓய்வுக்காலச் சேமிப்பு, அவர்களது வீட்டின் வருடாந்தர மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் படிநிலைகளாகப் பிரிக்கப்படும்.
$21,000 வரையிலான வருடாந்தர மதிப்புடைய வீட்டில் வசிப்பவர்களும் $60,000க்கும் குறைவான மத்திய சேம நிதி ஓய்வுக்காலச் சேமிப்பைக் கொண்டவர்களும் $1,500 வெள்ளி பெறுவார்கள்.
$21,000 வரையிலான வருடாந்தர மதிப்புடைய குடியிருப்பில் வசிப்பவர்களும் $60,000 முதல் $110,200 வரையிலான மத்திய சேம நிதி ஓய்வுக்காலச் சேமிப்பைக் கொண்டவர்களும் $1,000 பெறுவார்கள்.
$21,000 முதல் $31,000 வரையிலான வருடாந்தர மதிப்புடைய குடியிருப்பில் வசிப்பவர்கள் $500 பெறுவார்கள்.
மத்திய சேம நிதி ஓய்வுக்காலச் சேமிப்பு என்பது, ஓய்வுக்காலக் கணக்கு, ‘சிபிஎஃப் லைஃப்’ (CPF Life) ஆகியவற்றில் உள்ள எஞ்சிய தொகையின் அடிப்படையில் அல்லது ஓய்வுக்காலக் கணக்கு இன்னும் தொடங்கப்படாத பட்சத்தில் சாதாரணக் கணக்கு, சிறப்புக் கணக்கு ஆகியவற்றில் உள்ள எஞ்சிய தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
55 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு அந்த நிரப்புதொகை அவர்களின் ஓய்வுக்காலக் கணக்குகளில் போடப்படும். 55 வயது நிரம்பாதவர்கள் அத்தொகையை அவர்களின் சிறப்புக் கணக்குகளில் பெறுவார்கள்.
