தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை; 79 பேர் கைது, 3 கிலோ ஹெரோயின் பறிமுதல்

2 mins read
06ec0628-2639-4ee8-8703-0e8da6acd3ff
ஐந்து நாள் நடவடிக்கையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் எனப்படும் மெத்தஃபெட்டமின் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. - படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு

சிங்கப்பூரில் ஐந்து நாள்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மற்ற போதைப் பொருள்கள் உட்பட கிட்டத்தட்ட 3.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆகஸ்ட் 4லிருந்து 8ஆம் தேதிவரை தான் அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக், ஜூரோங், பாசிர் ரிஸ், தெம்பனிஸ், ஈசூன் போன்ற பகுதிகளில் பரவலாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறியது.

இதில் 3,457 கிராம் ஹெரோயின், ‘ஐஸ்’ எனப்படும் மெத்தஃபெட்டமின் 909 கிராம், 3 கிராம் கஞ்சா, 5 எக்ஸ்டசி மாத்திரைகள், 5 எரிமின் மாத்திரைகள் போன்ற போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்ததாக அறிக்கை விளக்கியது.

இந்நிலையில், 15 கிராம் ஹெரோயின் அல்லது 250 கிராம் மெத்தஃபெட்டமின் ஆகியவற்றை வைத்திருக்கும் ஒருவர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும் என்பது நினைவுகூரத்தக்கது.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் சந்தை மதிப்பு $470,000 என்று கூறப்படுகிறது. அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின், ஐஸ், கஞ்சா போன்றவை போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் ஒரு வாரத் தேவையை ஈடுசெய்யக்கூடியது என்றும் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 79 பேரில் நால்வர் மலேசிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவர்களிடமிருந்துதான் பெரும்பகுதி ஹெரோயின், ஐஸ் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், 25 வயது நிரம்பிய மலேசிய ஆடவர் ஒருவர் போதைப் பொருள் கடத்த முயன்ற குற்றத்திற்காக ஆகஸ்ட் 5ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்