தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓட்டுநரில்லாப் பொதுப் பேருந்துச் சேவைக்கு $8.1 மில்லியன் குத்தகை

2 mins read
d4410a06-2281-4e48-9de7-835d1413e147
ஜப்பானில் செயல்படும் ஓட்டுநரில்லாப் பேருந்தைப் போன்ற ‘பிஒய்டி' பேருந்துகள் முன்னோட்டச் சோதனையில் பயன்படுத்தப்படலாம். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

மரினா பே, ஒன் நார்த் வட்டாரங்களில் இரண்டு ஓட்டுநரில்லாப் பொதுப் பேருந்துச் சேவைகளைச் செயல்படுத்துவதற்கான $8.1 மில்லியன் குத்தகையைக் கூட்டமைப்பு ஒன்று வென்றுள்ளது.

எம்கேஎக்ஸ் டெக்னாலஜிஸ், சிடாவ் நெட்வொர்க் டெக்னாலஜி (பெய்ஜிங்) நிறுவனத்துக்கும் பிஒய்டி (BYD) நிறுவனத்துக்கும் அந்தக் குத்தகை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அந்தச் சேவை நடப்பிற்கு வரும்.

நாட்டின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தானியக்க வாகனங்களைத் தீவெங்கும் செயல்படுத்த இலக்கு கொண்டுள்ளது. அதன் ஓர் அம்சமாகப் புதிய குத்தகை வழங்கப்படுகிறது.

16 பேர் அமரக்கூடிய ஆறு மின்பேருந்துகள், ‘ஏவி’ மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றுடன் பொதுப் பேருந்துச் சேவையைச் செயல்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்புகள் குத்தகையில் அடங்கும்.

மரினா பே வட்டாரத்தில் செயல்படும் பேருந்து எண் 400, ஒன் நார்த் வட்டாரத்தில் செயல்படும் பேருந்து எண் 191 ஆகியவற்றில் முன்னோடித் திட்டங்கள் சோதிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (அக்டோபர் 2) அறிவித்தது.

பேருந்து எண் 400, மரினா பே, ‌ஷென்டன் வே ஆகிய வட்டாரங்களில் சேவை வழங்குகிறது. மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம், கரையோரப் பூந்தோட்டங்கள், ‌ஷென்டன் வே, டௌன்டவுன் பெருவிரைவு ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் பேருந்துப் பயணிகளை ஏற்றியும் இறக்கியும் செல்லும்.

பேருந்து எண் 191 ஒன் நார்த் வட்டாரத்தில் சேவை வழங்குகிறது. புவன விஸ்தா பேருந்து முனையத்தைத் தவிர, ஒன் நார்த், புவன விஸ்தா பெருவிரைவு ரயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் பயணிகளுக்குப் பேருந்துச் சேவை வழங்குகிறது.

ஆறு பேருந்துகள் செயல்படுத்தப்பட்டவுடன் கூடுதலான 14 ஓட்டுநரில்லாப் பேருந்துகளைக் கூட்டமைப்பிடமிருந்து கொள்முதல் செய்து சிங்கப்பூரில் உள்ள கூடுதல் பொதுப் பேருந்துகளுக்கு முன்னோடித் திட்டத்தை விரிவுபடுத்த நிலப் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.

சீன கார் நிறுவனமான ‘பிஒய்டி’ மின்சாரப் பேருந்துகளை வழங்கும்.

இயக்கத்தில் உள்ள பொதுப் பேருந்துகளில் இருக்கும் அதே அம்சங்கள் ஓட்டுநரில்லாப் பேருந்துகளிலும் இருக்கும். சக்கர நாற்காலி, தனிநபர் நடமாட்டச் சாதனம், பிள்ளைகளுக்கான தள்ளுவண்டி போன்றவற்றைப் பேருந்துக்குள் ஏற்றும் சாய்வுத் தளங்கள் அவற்றுள் அடங்கும்.

முன்னோட்டச் சோதனையின்போது ஓட்டுநரில்லாப் பேருந்துகளுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

மரினா பே வட்டாரத்தில் செயல்படும் பேருந்து எண் 400 ஓட்டுநரில்லாச் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
மரினா பே வட்டாரத்தில் செயல்படும் பேருந்து எண் 400 ஓட்டுநரில்லாச் சேவையில் ஈடுபடுத்தப்படும். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்
குறிப்புச் சொற்கள்