நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த இணையப் பாதுகாப்பு நிறுவனமான ‘கிரவுட் ஸ்ட்ரைக்’ வெளியிட்டிருந்த மென்பொருள் புதுப்பிப்பு தொடர்பில், உலகளவில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பால் கிட்டத்தட்ட 8.5 மில்லியன் மைக்ரோசாஃப்ட் சாதனங்கள் பாதிக்கப்பட்டன.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சனிக்கிழமை (ஜூலை 20) வெளியிட்ட வலைப்பதிவு ஒன்றில் இத்தகவலைத் தெரிவித்தது. ‘விண்டோஸ்’ இயங்குதளத்தில் செயல்படும் அனைத்துச் சாதனங்களில் இது 1 விழுக்காட்டுக்கும் குறைவு என்று அது கூறியது.
“இந்த விகிதம் சிறியது எனும் அதேவேளையில், இந்தப் பரவலான பொருளியல், சமுதாயத் தாக்கம், பல முக்கியச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ‘கிரவுட் ஸ்ட்ரைக்’ நிறுவனத்தின் மென்பொருளைப் பயன்படுத்துவதைக் காட்டுகிறது, என மைக்ரோசாஃப்ட் சொன்னது.
மைக்ரோசாஃப்ட்டின் அஸூர் (Azure) கட்டமைப்பு இப்பிரச்சினையை விரைந்து சரிசெய்ய, கிரவுட் ஸ்ட்ரைக் ஒரு தீர்வை ஏற்படுத்தியுள்ளதாக மைக்ரோசாஃப்ட் கூறியது.
தொழில்துறை எங்கும் காணப்பட்டுள்ள தாக்கம் குறித்த தகவலைப் பகிர, ‘அமேசான் வெப் சர்வீசஸ்’, ‘கூகல் கிளவுட் பிளாட்ஃபார்ம்’ இவற்றுடன் சேர்ந்து தான் பணியாற்றி வருவதாகவும் மைக்ரோசாஃப்ட் சொன்னது.

