தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெங்காவில் எட்டுப் புதிய பேருந்துச் சேவைகள்: ஜெஃப்ரி சியாவ்

2 mins read
53dbed21-a212-45b1-9406-319237865c5f
தெங்கா குடியிருப்பாளர்களின் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்க உதவும் வகையில் புதிய பேருந்துச் சேவைகள் அறிமுகம் காண்கின்றன என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சில பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் பயண நேரத்தைக் கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்து, தனியார் வாகனப் பயணங்களுடனான போட்டித்தன்மையை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளப் போவதாகத் தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.

மக்கள் கழகம் இரண்டாவது முறையாக ‘குடும்ப விளையாட்டுத் திடல்’ (PA Family PLAYGround) குடும்ப விழாவை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) தெங்கா சமூக மன்றத்தில் நடத்தியது.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு சியாவ், தற்காலிகப் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகச் செய்தியாளர்களிடம் பேசினார்.

“தெங்காவிலிருந்து நகருக்குச் செல்லும் பயண நேரத்தை ஒன்று முதல் இரண்டு மடங்கு அளவு குறைப்பதே நோக்கம்,” என்றார் திரு சியாவ்.

போக்குவரத்து சார்ந்த பணிகள் தமக்குப் புதிதன்று என்று திரு சியோவ் கூறினார்.

“நிலப் போக்குவரத்து ஆணையத்தின் திட்டங்களை மேற்கொள்வதும் ஏற்கெனவே செய்துவரும் முயற்சிகளைத் தொடரவும் ஆவலாக உள்ளேன்,” என்று தனது புதிய பொறுப்பு குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.

தெங்கா குடியிருப்பாளர்களின் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்க உதவும் வகையில் புதிய பேருந்துச் சேவைகள் அறிமுகம் காணவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதன் தொடர்பில், மேம்பட்டு வரும் தெங்கா வட்டாரத்தில் எட்டுப் புதிய பேருந்துச் சேவைகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் காணும் எனத் தெரிவிக்கப்பட்டது. அவற்றுள் இரு சேவைகள் இவ்வாண்டுக்குள் தொடங்கும்.

முதலில் தொடங்கவிருக்கும் பேருந்துச் சேவை 827 ஆகஸ்ட் 10ஆம் தேதி தன் பயணத்தைத் தொடங்கவுள்ளது.

தெங்கா பொலிவார்ட், பிளான்டேஷன் கிரசென்ட், புக்கிட் பாதோக், ஜூரோங் டவுன் ஹால், சைனிஸ் கார்டன் எம்ஆர்டி நிலையம் போன்ற பகுதிகள் வழியாக அப்பேருந்து இயக்கப்படும்.

இரண்டாவது சேவை பிரிக்லேண்டில் தொடங்கி புக்கிட் பாஞ்சாங், ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையங்கள் வழியாகச் செல்லும்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் இரு விரைவுப் பேருந்துச் சேவைகளும் நான்கு துணைப் பேருந்துச் சேவைகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெங்கா வட்டாரத்தில் 2024 ஜூலையில் ஒரு புதிய பேருந்து நிறுத்தம் திறக்கப்பட்டது. புக்கிட் பாதோக் வெஸ்ட், புக்கிட் கோம்பாக், பியூட்டி வோர்ல்ட் ஆகியவற்றுக்குச் செல்லும் புதிய பேருந்துச் சேவை 871 அறிமுகமானது.

அத்துடன், ஏற்கெனவே சேவையாற்றி வந்த 992 மற்றும் 870 என்ற இரு பேருந்துச் சேவைகளும் நீட்டிக்கப்பட்டன.

நான்காவது காலாண்டின் தொடக்கத்தில் கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும்.

திரு சியாவுடன் சுவா சூ காங் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகர்கள் டாக்டர் சூ பெய் லிங், ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம், ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாதோக் அடித்தள ஆலோசகர் லீ ஹாங் சுவாங் ஆகியோரும் வருகையளித்தனர்.

‘ஆர்ட் ஜெமிங்’ எனும் நடவடிக்கைவழி அதிகமான பங்கேற்பாளர்கள் ஒரு மிகப் பெரிய ஓவியத்தை உருவாக்கி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தனர். அச்சாதனை நடவடிக்கையில் ​​கிட்டத்தட்ட120 குடும்பங்கள் பங்குகொண்டன.

குறிப்புச் சொற்கள்