அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 புதிய பூங்கா, 13 கிலோ மீட்டர் பூங்கா இணைப்புப் பாதை

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 புதிய பூங்கா, 13 கிலோ மீட்டர் பூங்கா இணைப்புப் பாதை

2 mins read
e88bf70b-de29-45fc-826d-5413e1531a99
ஓவியரின் கைவண்ணத்தில் ஃபேரர் பார்க்கில் அமையவிருக்கும் புதிய பூங்கா. - படம்: ஸ்போர்ட்ஸ் எஸ்ஜி

சிங்கப்பூரில் சைக்கிளோட்டிகளுக்கும் மெதுவோட்டப் பயிற்சி மேற்கொள்வோருக்கும் வசதியாக அடுத்த ஐந்தாண்டுகளில் புதிதாக எட்டு பூங்காக்களையும் 13 கிலோ மீட்டர் பூங்கா இணைப்பு பாதைகளையும் அமைக்க தேசிய பூங்காக் கழகம் திட்டமிட்டுள்ளது.

ஃபேரர் பார்க், ஸ்பூட்டிஸ்வூட், உட்குரோவ் ஆகிய வட்டாரங்களின் மையப்பகுதிக்குள் அமையவிருக்கும் மூன்று பூங்காக்களும் இதில் அடங்கும்.

புதன்கிழமையன்று (மார்ச் 5) நாடாளுமன்ற அமர்வில் நடந்த தேசிய வளர்ச்சி வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அத்துறைக்கான மூத்த துணை அமைச்சர் டான் கியெட் ஹவ் அவ்விவரங்களைத் தெரிவித்தார்.

குறிப்பாக, ஃபேரர் பார்க் பூங்கா ஒரு பெரிய ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்குள் அமையவிருக்கிறது.

மேலும், இயற்கை எழில் கொஞ்சும் விளையாட்டுப் பகுதி, மெதுவோட்டப் பாதை, திறந்த புல்வெளி போன்ற சிறப்பு அம்சங்கள் அப்பூங்காவில் நிறைந்திருக்கும்.

இவ்வாண்டுத் தொடங்கி 2030ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 25க்கும் அதிகமான பூங்காக்கள் கிட்டத்தட்ட 170 ஹெக்டருக்கு மேல் இருக்கும் பரப்பளவில் கட்டி முடிக்கப்படும் என தேசியப் பூங்காக் கழகம் கூறியது.

மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரர்கள் பசுமையான இடங்களில் நடந்து செல்வதையும் சைக்கிள் ஓட்டுவதையும் எளிதாக்கும் வகையில், 50 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பூங்கா இணைப்புப் பாதைகள் அமைக்கப்படும் எனக் கழகம் சொன்னது.

அவற்றை ஈசூன் அவென்யூ 1, புக்கிட் பாஞ்சாங் நார்த், பயனியர் ரோடு நார்த் ஆகிய இடங்களில் எதிர்பார்க்கலாம்.

100 ஹெக்டருக்கும் அதிகமான பூங்கா மேம்பாட்டுப் பகுதிகளுக்கான ஆய்வுகளைக் கழகம் மேற்கொள்ளுமெனவும் கூடுதலாக பூங்கா இணைப்புப் பாதைகள் அமைப்பது குறித்து ஆய்வுசெய்ய பிற நிறுவனங்களுடன் இணைந்து அது செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

அம்முயற்சிகள் அனைத்தும் அரசாங்கத்தின் இயற்கை சூழ்ந்த நகரம் எனும் தொலைநோக்குச் சிந்தனையின் ஒரு பகுதியாகும்.

இது நகர்ப்புறங்களில் இயற்கையை மீட்டெடுத்து சிங்கப்பூரைப் பசுமையான நகரமாக மாற்றும் திட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“2030ஆம் ஆண்டுக்குள் 500 கிலோ மீட்டர் பூங்கா இணைப்புப் பாதைகள் என்ற எங்கள் இலக்கை அடைவதில் நாங்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம்,” எனத் திரு டான் நாடாளுமன்ற அமர்வில் கூறினார்.

நாட்டில் நீர்வளம் சார்ந்த நிலப்பரப்பை விரிவுபடுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்