தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலை குறுக்கே ஓடிய 8 வயது சிறுவன் வேனுக்குக் கீழே சிக்கிக்கொண்ட சம்பவம்

2 mins read
58b456b9-954e-4e8a-847f-5999a1c9b6a8
வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்ட சிறுவனுக்குப் பக்கத்தில் இருந்தபடி அவரின் தந்தை ஆறுதல் சொல்கிறார். - படம்: ஷின் மின் வாசகர்

சாலை குறுக்கே திடீரென ஓடிய எட்டு வயது சிறுவனை வேன் ஒன்று மோதியதில், அச்சிறுவன் வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்ட சம்பவம் ஹவ்காங் வட்டாரத்தில் நடந்துள்ளது.

ஹவ்காங்கின் லோரோங் ஆ சூ பகுதியில் பிப்ரவரி 23ஆம் தேதி பகல் சுமார் 3.50 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில், சிறுவன் பேருந்தைப் பிடிப்பதற்காகச் சாலை குறுக்கே ஓடியிருக்கக்கூடும் என்று ஷின்மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது.

தாங்கள் குடும்பமாக இரவு விருந்துக்குச் செல்லவிருந்ததாகக் கூறிய சிறுவனின் தாயார், பாதசாரிகளுக்கான போக்குவரத்து விளக்கு பச்சை நிறமாக மாறத் தாங்கள் காத்திருந்ததாகக் கூறினார்.

சிறுவனின் கையை அவர் பிடித்திருந்தபோது திடீரென்று சிறுவன் அவரது கையை உதறிவிட்டு சாலை குறுக்கே ஓடியதாகவும் அப்போது வேன் அவர் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு கை மட்டும் வெளியே தெரிந்தவாறு வேனுக்கு அடியில் சிறுவன் சிக்கிக்கொண்டதாகச் சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் கூறினார்.

தம் கணவர் சாலையைக் கடந்துவிட்டதாகக் கூறிய சிறுவனின் தாயார், தம் மகன் ஏன் சாலை குறுக்கே அவ்வாறு ஓடினார் என்று தமக்குப் புரியவில்லை என்றார்.

“என் மகன் வேனுக்கு அடியில் இருந்தபடி பயத்தில் அழுதுகொண்டும் கத்திக்கொண்டும் இருந்தார். ஆனால், எப்படியோ அவராகவே வெளியே தவழ்ந்து வந்துவிட்டார்,” என்றார் சிறுவனின் தாயார்.

சிறுவனின் தங்கைக்குக் காலில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தன் அண்ணனின் பின்னால் அச்சிறுமி சாலை குறுக்கே ஓடியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, வேன் ஓட்டுநரைத் தாம் குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று குறிப்பிட்ட சிறுவனின் தாயார், தம்முடைய பிள்ளைகளின் மீதுதான் தவறு உள்ளதாகச் சொன்னார்.

விபத்தால் சிறுவனுக்கு ஆழமான வெட்டு ஒன்று ஏற்பட்டதாகவும் அதற்குத் தையல் தேவைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சிறுவனுக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. சிறுவன் மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக ஷின் மின் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்