ஊதியம் பெறாத வெளிநாட்டு ஊழியர்க்கு உதவ முன்வந்த 80 நிறுவனங்கள்

என்டியுசி,ஊழியர்களுக்கான உதவிகளை முன்னெடுக்கிறது

ஊதியம் பெறாத வெளிநாட்டு ஊழியர்க்கு உதவ முன்வந்த 80 நிறுவனங்கள்

தங்குமிடம் உட்பட மாற்று வேலைகளில் பணியமர்த்த ஏற்பாடுகள் மும்முரம்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Jun 2026 - 6:24 pm

2 mins read

கேபிஏ எஞ்ஜினியரிங் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால் வேலையும் ஊதியமும் இன்றி தவித்த 400க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உதவ 80 நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

அடுத்த வாரம் முதல் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவிருப்பதாக தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைவர் இங் சீ மெங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) பதிவிட்டார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்குவதற்கு மாற்று இடங்களை என்டியுசியும் வெளிநாட்டு ஊழியர் நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த 407 பேரையும் இவ்வார இறுதிக்குள் ஒரே தங்குமிடத்தில் தங்கவைப்பது அவர்களுக்கு உதவிகள் வழங்க ஏதுவாக இருக்கும் என்பதையும் திரு இங் குறிப்பிட்டார்.

“வேலைகளைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பணிகள் வழங்க ஏறத்தாழ 80 நிறுவனங்களுக்குமேல் எங்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளன. அவர்களிடம் 400 வேலை வாய்ப்புகள் உள்ளன என்று தெரிகிறது. தொழிற்சங்கம் மேலும் பல நிறுவனங்களிடம் தொடர்பில் உள்ளது,” என்றார் திரு இங்.

துவாஸ் வியூ ஊழியர் தங்குமிடத்தில், மீதம் உள்ள ஊழியர்களிடம் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி அவர்களது புகார்களை நேரடியாகப் பதிவு செய்ய உதவி வருகிறது என்று ஜாலான் காயு தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களில் எவரும் பின்தங்கிவிடாமல் இருப்பதைத் தொழிற்சங்கம் உறுதிசெய்யும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

‘கேபிஏ எஞ்ஜினியரிங்’, ‘எஸ்கே இண்டஸ்ட்ரீஸ்’, ‘விவிஆர் பிளான்ட் என்ஜினியரிங்’ என்ற பெயரில் இயங்கிய மூன்று நிறுவனங்களில் பணிபுரிந்த அந்த ஊழியர்கள், இந்தியாவையும் பங்ளாதேஷையும் சேர்ந்தவர்கள். குளிர்சாதனச் சேவை, குழாய் வேலைகள், கட்டுமானம் போன்ற பணிகளில் அந்நிறுவனங்கள் ஈடுபட்டன.

தலைமறைவான இயக்குநர்

அந்த மூன்று நிறுவனங்களோடு மேலும் நான்கு நிறுவனங்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசியான ராமு பழனி வேலு என்ற இயக்குநரின் தலைமையில் இயங்கி வந்தன.

ராமுவை இதுவரையில் யாராலும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் சிங்கப்பூரைவிட்டு வெளியேறி விட்டதாக நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்