தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செயற்கை நுண்ணறிவில் சிங்கப்பூரர்களுக்கு 800 வேலை, பயிற்சி வாய்ப்புகள்

3 mins read
7e8f518c-57d0-4175-ab77-823618dbeda5
மே 27ஆம் தேதி ‘ஏடிஎக்ஸ் எண்டர்பிரைஸ்’ மாநாட்டில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பல புதிய முயற்சிகளை அறிவித்த மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

செயற்கை நுண்ணறிவில் சிங்கப்பூரர்கள் 800 வேலை, பயிற்சி வாய்ப்புகள்மூலம் பயனடையலாம்.

இதனைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், மே 27ஆம் தேதி ‘ஏடிஎக்ஸ் எண்டர்பிரைஸ்’ மாநாட்டில் அறிவித்தார்.

அவ்வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் இரு புதிய திட்டங்களைத் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ), ஏஐ சிங்கப்பூருடனும் முன்னணி நிறுவனங்களுடனும் இணைந்து தொடங்கியுள்ளது.

முதலாவதாக, ஏஐ சிங்கப்பூரின் ‘சீ-லயன்’ (SEA-LION) எனும் தென்கிழக்காசிய மொழிகள் சார்ந்த ஏஐ திட்டத்துடன் இணைந்து ஐஎம்டிஏ புதிய ‘பினேக்கல் ஏஐ தொழில்துறைத் திட்டத்தை’ (Pinnacle AI Industry Programme) தொடங்கியுள்ளது.

இத்திட்டம், ஏஐ மேம்பாட்டில் பணியாற்றும் நிறுவனங்களின் உதவியோடு உள்ளூர் ஏஐ தொழில்முறைப் பயன்பாட்டாளர்களை (AI Practitioners) “ஏஐயை உருவாக்கும் நிபுணர்களாக” மாற்றும். சீ-லையன் உடன் பணியாற்றவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

இரண்டாவதாக, தொழில்துறைத் தேவைகளுக்கிணங்கத் திறன்மிக்க ஏஐ தொழில்முறைப் பயன்பாட்டாளர்களை வளர்க்கும் புதிய ‘ஏஐ தொழில் பயிற்சித் திட்டம் (தொழில்துறை)’ (AI Apprenticeship Programme (Industry)) அறிமுகமாகும்.

இவ்விரு திட்டங்கள்வழி 400 புதிய ஏஐ வேலை, பயிற்சிவாய்ப்புகள் உருவாகும்.

ஐஎம்டிஏ ஏற்கெனவே வழங்கும் ‘தொழில்நுட்பத்துறைத் திறன்பயிற்சி, வேலை அமர்வுத் திட்டம்’ (TechSkills Accelerator) மூலம் சிங்கப்பூரர்கள் ஏஐயில் மேலும் 400 வேலை, பயிற்சி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏஐ தொழில்முறைப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை மும்மடங்குக்கும் மேலாக, 15,000க்கு அதிகரிப்பதை சிங்கப்பூர் இலக்காகக் கொண்டுள்ளது எனப் பிரதமர் வோங் 2023 டிசம்பரில் கூறியிருந்தார். தற்போது அந்த எண்ணிக்கை 6,000க்கும் மேலாக உள்ளது.

ஜென்ஏஐ பயன்பாட்டில் 1,000க்கு மேற்பட்ட வர்த்தகங்களுக்கு ஆதரவு

‘மின்னிலக்கத் தலைவர்களுக்கான ஜென்ஏஐ திட்டம்’ (GenAI x Digital Leaders) விரிவாக்கப்படும். அதன்வழி அடுத்த ஆண்டில் இன்னும் 1,000க்கும் மேற்பட்ட வர்த்தகங்கள் பயன்பெறும்; 500 திட்டங்கள்வரை ஆதரவு பெறும்.

ஐஎம்டிஏ மைக்ரோசாஃப்ட், அமேசான் இணையச் சேவைகள் உடன் வழங்கும் இத்திட்டம் மூலம் ஏப்ரல் 2025 நிலவரப்படி ஏற்கெனவே 200க்கும் மேற்பட்ட வர்த்தகங்கள் பயன்பெற்றுள்ளன; 50 திட்டங்கள் ஆதரவுபெற்றுள்ளன.

அடுத்த ஆண்டில் இத்திட்டம்வழி தொழில்நுட்பப் பயிலரங்குகள் இருமடங்காகும். தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் நேரமும் செலவும் பாதியாகக் குறைக்கப்படும்.

கூடுதலாக 5,000 வர்த்தகங்களின் திறன்களை வளர்க்கப் புதிய பங்காளித்துவங்கள்

புதிய மின்னிலக்க வர்த்தக வரைபடப் பங்காளிகளுடன் மூத்த அமைச்சர் டான் கியட் ஹாவ் (நடுவில்).
புதிய மின்னிலக்க வர்த்தக வரைபடப் பங்காளிகளுடன் மூத்த அமைச்சர் டான் கியட் ஹாவ் (நடுவில்). - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

2024ல் தொடங்கப்பட்ட மின்னிலக்க வர்த்தக வரைபடத்தை (Digital Enterprise Blueprint) ஆதரிக்க ஐஎம்டிஏ அலிபாபா கிளவுட், எஸ்டி இஞ்சினியரிங், புருடென்‌ஷியல் சிங்கப்பூர் ஆகிய மூன்று புதிய பங்காளிகளை வரவேற்கிறது. இவற்றின்வழி 5,000க்கும் மேற்பட்ட வர்த்தகங்கள் பயன்பெறும்.

“அலிபாபா கிலவுட் மின்னிலக்க விரிவாக்கம்” திட்டம் மூலம் ‘அலிபாபா கிலவுட்’ அதிகபட்சம் 3,000 சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் மற்றும் மின்னிலக்கத் தீர்வு வழங்குநர்களின் மின்னிலக்கத் திறன்களை வளர்க்க உறுதிபூண்டுள்ளது.

எஸ்டி இஞ்சினியரிங் சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்கான இணையப் பாதுகாப்பு மீள்திறன் திட்டத்தைத் துவங்கும். உதாரணத்துக்கு, 2,000 சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் இலவச இணைய அச்சுறுத்தல்களைக் கண்டறியும் சேவைகளைப் பெறும்.

ஜென்ஏஐ தீர்வுகளைச் செயல்படுத்துவதில் சிறிய, நடுத்தர வர்த்தகங்களை ஆதரிக்கப் ‘புருடென்‌ஷியல் சிங்கப்பூர்’ ‘ஜென்ஏஐ எக்ஸ்பொனென்‌ஷியல்’ (GenAI Xponential) எனும் திட்டத்தைத் துவங்கும். ஜென்ஏஐயை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் காணொளிகள்மூலம் இத்திட்டம் தெளிவுபடுத்தும்.

பங்காளிகளுடனான முயற்சிகளை ‘ஐஎம்டிஏ’வின் ‘தலைமைத் தொழில்நுட்ப நிர்வாகிச் சேவை’ தளத்தில் (CTO-as-a-Service platform) அணுகலாம்.

மேலும், ஏஐ சிங்கப்பூர், முதல் தென்கிழக்காசிய ஏஐ உருவாக்குவோருக்கான (Developer) சவாலைத் தொடங்குகிறது. தென்கிழக்காசிய ஏஐ நிபுணர்கள் இதன்வழி சீ-லையன் போன்ற ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஏஐ தீர்வுகளை அமைக்கமுடியும்.

குறிப்புச் சொற்கள்