பணமோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 27 வயது வோங் சுன் ஹாவ், $80,000 மதிப்புள்ள பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட பணத்தை வைத்திருந்த குற்றச்சாட்டை வோங்க் எதிர்நோக்குகிறார்.
ஆடவர் இம்மாதம் 8ஆம் தேதி குற்றம் புரிந்ததாக நம்பப்படுகிறது.
குற்ற நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட $5,000 பணத்தை வோங் வைத்திருந்ததாகவும், $75,000 பணத்தைப் பெற முயன்றதாகவும் நீதிமன்ற அறிக்கைகள் குறிப்பிட்டன.
இணைய மின்னிலக்க நாணய முதலீட்டு மோசடி மூலம் இரண்டு முறை அறிமுகம் இல்லாத தனிநபர்களுக்கு $90,000 ரொக்கத்தைக் கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் காவல்துறையிடம் கடந்த மாதம் 24ஆம் தேதி புகார் அளித்தார்.
இணைய முதலீட்டுக் கணக்குக்கான நிரப்புத்தொகையாக அந்தப் பணத்தைக் கொடுத்ததாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டார். அது பின்னர் மோசடி என்று தெரியவந்தது.
பாதிக்கப்பட்டவரிடமிருந்து கூடுதல் பணம் பெற முயன்றதாகக் கூறப்படும் வோங்கை அங் மோ கியோ காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
அதேபோன்ற மோசடியில் இதற்குமுன் மற்றொருவரிடமிருந்து $5,000 ரொக்கத்தை வோங் பெற்றதாகவும் நம்பப்படுகிறது.
கூடுதல் விசாரணைக்காக வோங்கின் வழக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 7ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.
பணம் மோசடி குற்றங்களைக் கடுமையானதாய் கருதுவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.