நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் காவல்துறையும் தீவு முழுவதும் இணைந்து நடத்திய மூன்று நாள் சோதனைகளில் மொத்தம் 81 கனரக வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
மே 5ஆம் தேதியிலிருந்து மே 7ஆம் தேதி வரை சோதனைக்காக மொத்தம் 192 கனரக வாகனங்களை அதிகாரிகள் நிறுத்தினர்.
கனரக வாகன ஓட்டுநர்கள் மொத்தம் 87 குற்றங்கள் புரிந்ததாக வெள்ளிக்கிழமை மே 9ஆம் தேதி சொன்ன காவல்துறை, ஒருசில ஓட்டுநர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகப் பிடிபட்டதாகத் தெரிவித்தது.
வேகமாக வாகனத்தை ஓட்டியது, வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியது, சாலையின் இடத் தடத்தில் செல்லத் தவறியது, வாகனத்தில் உள்ள பொருள்களைக் கயிறுகளால் இறுகக் கட்டத் தவறியது ஆகிய பல்வேறு குற்றங்களுக்காக ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஏறக்குறைய நிலப் போக்குவரத்து ஆணையம் தொடர்பான 94 குற்றங்களும் கண்டறியப்பட்டன. அனுமதியின்றி விரைவுச்சாலையில் சென்றது, அளவுக்கு அதிகமான பாரத்தை வாகனத்தில் ஏற்றியது ஆகியவை அவற்றுள் அடங்கும்.
கனரக வாகனம் ஓட்டுவோரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு $1,000 அபராதம் அல்லது மூன்று மாதச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும். மீண்டும் அதே குற்றத்தைப் புரிவோருக்கு $2,000 அபராதம், ஆறு மாதச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.
வேகக் கட்டுப்பாட்டு வில்லைகள் இன்றி செயல்பட்ட கனரக வாகனங்களின் எண்ணிக்கை கவலைக்குரியதாக இருப்பதாய் காவல்துறையின் அறிக்கை குறிப்பிட்டது. சோதனையின்போது மொத்தம் 24 கனரக வாகனங்களில் அந்த வில்லைகள் ஒட்டப்படவில்லை.
வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் கனரக வாகனங்களில் பொருத்தப்படுவதும் முக்கியம் என்று விவரித்த காவல்துறை அதிகாரிகள், வாகனத்தின் அதிகபட்ச வேகத்தை அது கட்டுப்படுத்தும் என்றது.
தொடர்புடைய செய்திகள்
12,000 கிலோவுக்கு மேல் அதிகபட்ச எடை கொண்ட கனரக வாகனங்களின் அனைத்து உரிமையாளர்களும், வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் தெளிவாகக் காட்டப்படும் வகையில், வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்துமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.
வாகன முன்பக்க கண்ணாடியில் உரிய இடத்தில் வேகக் கட்டுப்பாட்டு வில்லையைத் தெளிவாகக் காட்டத் தவறினால் $1,000 வரை அபராதம், 3 மாதங்கள் வரை சிறை விதிக்கப்படலாம்.