சாங்கி விமான நிலையத்தில் மீண்டும் மீண்டும் வாசனைத் திரவியம் திருடிய 82 வயது பயணி

1 mins read
3516024d-1bc6-4e5b-9f5d-0012fd4d170f
திருடிவிட்டு சிங்கப்பூரில் இருந்து இருமுறை மாயமான ஆஸ்திரேலிய ஆடவர் ஜூலை 24ஆம் தேதி மற்றொரு விமானத்திற்கு மாற சாங்கி விமான நிலையம் வந்தபோது பிடிபட்டார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையம் முனையம் 1ல் இரண்டு போத்தல்கள் வாசனைத் திரவியம் திருடியதாக 82 வயது ஆஸ்திரேலிய ஆடவர் கைது செய்யப்பட்டு உள்ளார். வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) அவர் மீது குற்றம் சுமத்தப்பட உள்ளது.

மார்ச் 18ஆம் தேதி காலை 9.30 மணியளவில் விமான நிலையத்தின் பயண மாறுதல் பகுதியில் நிகழ்ந்த அந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காவல்துறை சில விவரங்களை வெளியிட்டது.

வாசனைத் திரவியம் விற்கும் ‘த ஷில்லா’ என்னும் கடையில் இருந்து $149 மதிப்புள்ள ஒரு வாசனை போத்தல் திடீரென்று காணாமல் போனது.

விமானநிலைய காவல்துறையினர் கண்காணிப்புப் படக்கருவியை ஆராய்ந்து, அதனைத் திருடிய ஆடவரை அடையாளம் கண்டனர்.

ஆயினும், அந்த முதியவர் சிங்கப்பூரைவிட்டு வெளியேறிவிட்டார்.

அந்தச் சம்பவத்திற்கு நான்கு நாள் முன்னர், மார்ச் 13ஆம் தேதியும் அதே ஆடவர் அதே கடையில் அதே வாசனைத் திரவியத்தைத் திருடிவிட்டு சிங்கப்பூரைவிட்டுச் சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.

அவர் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜூலை 24ஆம் தேதி மற்றொரு விமானத்திற்கு மாற சாங்கி விமான நிலையம் வழியாக வந்தபோது கைது செய்யப்பட்டார். திங்கட்கிழமை அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட உள்ளது.

குறிப்புச் சொற்கள்