உணவுப் பாதுகாப்பு தொடர்பில் பல விதிமுறைகளை மீறியதற்காக உணவு நிறுவனம் ஒன்றுக்கு புதன்கிழமையன்று (டிசம்பர் 11) 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு தயாரித்து விநியோகிக்கும் அந்நிறுவனத்தின் (caterer) உணவை சாப்பிட்ட 83 பேர் நச்சுணவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டது.
மசாக்கான் ஷாய்க் சாப்ரி (Masakan Shaik Sabri) எனும் நிறுவனம் சிங்கப்பூர் உணவு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டதாகும். அதன் உணவைச் சாப்பிட்ட சிலர் நச்சுணவால் பாதிக்கப்பட்டனர் என்று 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுகாதார அமைச்சுக்கும் சிங்கப்பூர் உணவு அமைப்புக்கும் தகவல் கிடைத்தது.
சம்பந்தப்பட்டவர்கள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு புதன்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
பிடோக்கில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் இடத்தில் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் கூட்டு விசாரணை மேற்கொண்டன. அங்கு உணவு தயாரிக்கும் இடத்தில் கரப்பான்பூச்சிகள் இருந்தது, இடம் சுத்தமாக இல்லாதது உள்ளிட்டவை விசாரணையில் தெரிய வந்தன.
பொதுமக்களின் சுகாதாரம் கருதி சென்ற ஆண்டு மே மாதம் நான்காம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 22ஆம் தேதி வரை சிங்கப்பூர் உணவு அமைப்பு, மசாக்கான் ஷாய்க் சாப்ரி நிறுவனத்திற்குத் தற்காலிக தடை விதித்தது.