ஏப்ரல் மாத நிலவரப்படி, கடந்த 2025ஆம் ஆண்டில் குடும்பங்களை ஆதரிக்கும் இலக்குடன் வழங்கப்பட்ட சிறார் லைஃப்எஸ்ஜி திட்டத்தின் $500 வழங்குதொகை 83 விழுக்காடு பயன்படுத்தப்பட்டது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் கோ பெய் மிங், வியாழக்கிழமை (மே7) நாடாளுமன்றக் கேள்விக்கு அளித்த பதிலில் விளக்கினார்.
தகுதி பெறும் பெற்றோருக்கு வழங்கப்பட்ட அத்தொகை இவ்வாண்டு ஜூலை மாதம் காலாவதியாகும் எனவும் அதைப் பயன்படுத்துவதற்கான காலத்தை அரசாங்கம் நீட்டிப்பு செய்யாது என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
பெற்றோருக்குப் போதிய அளவு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொகையைப் பயன்படுத்திக்கொள்ளும்படி சமூக ஊடங்கள், லைஃப்எஸ்ஜி செயலி, குறுஞ்செய்திகள் வழியாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தகுதி பெற்ற தாய் தந்தையர்க்குத் தொடர்ந்து நினைவூட்டிவந்தது.
மீதம் உள்ள தொகையைப் பயன்படுத்தும்படி பெற்றோருக்கு இறுதியாக இவ்வாண்டு ஜூன் மாதம் தெரிவிக்கப்படும் என்பதையும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பன்னிரண்டு வயதுக்கும் குறைவான வயதுடைய பிள்ளைகளுக்கு தலா $500 கடந்த ஜூலை மாதம் வழங்கப்பட்டது.
லைஃப்எஸ்ஜி செயலி மூலம் அந்தத் தொகையைப் பெறலாம். அதனை இணையத்திலோ நேரடியாகவோ வர்த்தகர்களிடம் பேநவ், யுஇஎன், அல்லது நெட்ஸ், கியூஆர் குறியீட்டைக் கொண்டு கட்டணங்கள் செலுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
பிள்ளை வளர்ப்பில் பெற்றோருக்கு உதவும் நோக்கத்துடன் இத்திட்டம் அறிமுகம் கண்டது. தற்போது வரை திட்டம் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அடுத்த சில மாதங்களில் அதன் பயன்பாடு பெற்றோரிடையே அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

