சிங்கப்பூரில் இவ்வாண்டு கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் 83 பேர் மாண்டனர். அவர்களில் 78 பேர் மூத்தோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 60 வயது அல்லது அதையும் தாண்டிய மூத்தோர், மருத்துவ ரீதியாக பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம் இருப்போர் ஆகியோர் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கூடுதல் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாண்டு கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பலியானோரில் 78 பேர் 60 வயது அல்லது அதையும் தாண்டியவர்கள், நால்வர் 50லிருந்து 59 வயதுக்கு உட்பட்டவர்கள், ஒருவர் 16 வயது அல்லது அதற்கும் குறைவானவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்ட 50 வயதைத் தாண்டிய நால்வரும் வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தவர்கள் என்றும் அவர்களில் மூவர் கடந்த ஆண்டில் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் சுகாதார அமைச்சு சொன்னது. எஞ்சிய ஒருவர் சிங்கப்பூருக்கு வருகை தந்த வெளிநாட்டவர். அவர் எத்தனை முறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தார் என்ற விவரம் தெரியவில்லை.
மாண்ட இளையருக்கும் மற்ற மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன. அவர் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இவ்வாண்டு கொவிட்-19க்குப் பலியானோரின் எண்ணிக்கை, சென்ற ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் பதிவானவற்றுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். சென்ற ஆண்டு 317 பேர் மாண்டனர், 2022ல் 860 பேர் மாண்டனர்.
ஆண்டிறுதியில் பலர் அதிகப் பயணங்களை மேற்கொள்ளும்போதும் சிங்கப்பூரில் கொவிட்-19 நிலவரம் பொதுவாக கட்டுக்குள் இருக்கிறது என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அதேவேளை, கொவிட்-19 கிருமித்தொற்றால் மோசமாக நோய்வாய்ப்படுவோரைப் பற்றியே தங்களுக்கு அதிக கவலை இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். பொதுவாக அத்தகையோர் மூத்த குடிமக்களாக இருக்கின்றனர் என்று அவர் சுட்டினார்.
இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் 108 பேருக்குத் தீவிர சிகிச்சை தேவைப்பட்டது. அவர்களில் 80 விழுக்காட்டினர் 60 வயது அல்லது அதையும் தாண்டிய முத்தோர்.

