லாசரஸ் தீவில் அமைக்கப்பட்ட ‘டைனி அவே எஸ்கேப்’ விடுதிகளில் ஏறக்குறைய 8,300 பேர் கடந்த மூவாண்டுகளில் தங்கிசென்றதாக உள்ளூர் நிறுவனமான பிக் டைனி தெரிவித்தது.
2023ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய பிக் டைனி, லாசரஸ் தீவில் இருந்த தனது விடுதிகளுக்கு வலுவான ஆதரவு இருந்ததைக் குறிப்பிட்டது.
கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய விடுதிகளை நடத்திவரும் பிக் டைனி நிறுவனம், அனைத்து இடங்களையும்விட லாசரஸ் தீவு மிகவும் நெருக்கமான ஓர் இடமாக இருந்ததாகக் குறிப்பிட்டது.
சரியான தருணம் கிடைக்கும்போது லாசரஸ் தீவில் அதே அனுபவத்தை மீண்டும் கொண்டுவருவதுகுறித்து ஆலோசிப்போம் என்று பிக் டைனி நிறுவனம் சொன்னது.
இம்மாதம் 27ஆம் தேதி பிக் டைனி நிறுவனம் அதன் சமூக ஊடகப் பக்கங்களில் லாசரஸ் தீவில் உள்ள செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளப்போவதாகத் தெரிவித்திருந்தது.
இருப்பினும், 2027ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிவரை நிறுவனத்தின் விடுதிகளில் தங்கிக்கொள்வதற்கான முன்பதிவுகளை வரவேற்பதாக பிக் டைனி கூறியது.
செந்தோசா மேம்பாட்டுக் கூட்டுறவு நிறுவனத்தின் மூவாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக பிக் டைனி நிறுவனம் லாசரஸ் தீவில் அதன் விடுதிகளை அமைத்தது.
அந்தச் சோதனைத் திட்டம் 2027ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி முடிவடைகிறது.
தொடர்புடைய செய்திகள்
நீடித்த நிலைத்தன்மை அம்சங்களும் சோதனைத் திட்டத்தில் ஆராயப்பட்டன. அதன் ஓர் அம்சமாக பிக் டைனி விடுதிகள் அனைத்தும் சூரிய மின்சக்தியில் இயங்கின.
மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் போன்ற பொருள்களாலும் விடுதிகள் உருவாக்கப்பட்டன. விடுதியில் தங்கும் விருந்தாளிகளுக்கும் மக்கக்கூடிய தன்மையுள்ள ஷாம்பூவும் சவர்க்காரங்களும் வழங்கப்பட்டன.
பிக் டைனியின் சிறிய விடுதிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளன.
லாசரஸ் தீவில் நிறுவனம் ஐந்து சிறிய விடுதிகளை நிறுவியது. அங்குள்ள அறை 139 சதுர அடியிலிருந்து 167 சதுர அடி வரையிலான பரப்பளவைக் கொண்டவை.
ஓர் இரவு அங்குத் தங்குவதற்கான கட்டணங்கள் $284லிருந்து தொடங்குகிறது.

