ஜோகூர் பாரு: சிங்கப்பூர் ஆடவர் உட்பட 85 சட்டவிரோதக் குடியேறிகளை ஜோகூர் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது.
இது தொடர்பாக ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் முகம்மது ருஸ்டி முகம்மது டாருஸ் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
“ஜோகூர் பாருவிலும் மூவாரிலும் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நவம்பர் 8, 9 தேதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
“நவம்பர் 9ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் தாமான் மவுண்ட் ஆஸ்டினில் உள்ள இரண்டு வர்த்தக வளாகங்களில் சட்டவிரோதக் குடியேறிகள் இருப்பதாகவும் அவர்கள் முறையற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வளாகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
“அந்தச் சோதனையைத் தொடர்ந்து 43 வெளிநாட்டினரும் மூன்று உள்ளூர்வாசிகளும் வெவ்வேறு குற்றச்செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
“36 பெண்கள் உட்பட 38 தாய்லாந்து நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். மியன்மார், வியட்னாம் மற்றும் லாவோசைச் சேர்ந்த ஆடவர்களும் பிடிபட்டனர்,” என்றார் திரு ருஸ்டி.
வர்த்தக வளாகங்களின் உரிமையாளர்கள் மற்றும் காப்பாளர்களாக உள்ள மூன்று மலேசியர்களும் கைது செய்யப்பட்டோரில் அடங்குவர் என்று கூறிய அவர், அவர்கள் 19 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டோர் என்றார்.
நவம்பர் 8ஆம் தேதி இரவு 8.10 மணியளவில் தாமான் அபாட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பாலஸ்தீனர், சிங்கப்பூரர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 20 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
“கைதான 23 பேரும் உணவுக் கடைகளில் சட்டவிரோதமாக வேலை செய்தனர். சிங்கப்பூரர் உணவக உதவியாளராகவும் பாலஸ்தீனர் சமையல்காரராகவும் பணியாற்றினர்,” என்று அவர் தெரிவித்தார்.
அனுமதி இன்றி வேலை செய்வது தொடர்பாகவும் உரிமம் இன்றி தொழில் செய்வது தொடர்பாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால் அந்தச் சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக திரு ருஸ்டி குறிப்பிட்டார்.
மூவாரின் பல்வேறு பகுதிகளில் நவம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 19 சட்டவிரோதக் குடியேறிகள் கைதாயினர்.