சிட்டி ஹால் ரயில் நிலையத்தில் 68 வயது மாது ஒருவரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் 88 வயது ஆடவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டிசம்பர் 31ஆம் தேதி மாலை 4.30 மணிவாக்கில் சானியா மாராப் என்னும் அந்த மாது ரயில் நடைமேடைக்கு அருகே சென்றுள்ளார். அப்போது அவர் 88 வயது ஆடவரை மின்தூக்கி அருகே பார்த்தார்.
அந்த முதியவர் கையில் பல பைகள் வைத்திருந்ததாக சானியாவின் மகன் எடி கைருல் தெரிவித்தார்.
முதியவரின் பை ஒன்றில் சானியாவின் கால் பட்டது, அதைக் கண்ட முதியவர் சானியாவின் முகத்தில் குத்தியதாக கைருல் தெரிவித்தார்.
முதியவர் அடித்ததால் கோபமடைந்த சானியா ஆடவரின் பைகளை உதைத்தார். மேலும், அவர் முதியவரைப் படமெடுத்தார். முதியவரும் உடனடியாக ரயிலில் ஏறினார்.
முகத்தில் அடிவாங்கியதால் நடக்கத் தடுமாறிய சானியா எஸ்எம்ஆர்டி ஊழியரை அணுகி நடந்ததை விவரித்தார்.
அதையடுத்து, அந்த ஊழியர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்.
பின்னர் அந்த மாது ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் அங்கு இரண்டு நாள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தாக்கப்பட்ட மாது நீதிமன்றத்தில் துப்புரவு வேலை செய்பவர்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.