தனது துணையை வெட்டிக் கொன்றதற்காக 15 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 88 வயது சிங்கப்பூரர் 2025 டிசம்பரில் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்ததாக மரண விசாரணை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாக் கியான் ஹுவாட் எனப்படும் அந்த ஆடவர் வியாதியால் இயற்கையான முறையில் மாண்டதாகவும் அதில் சதி நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மே 12) கூறியது.
அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளைச் சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவ நிலையமும் சாங்கி பொது மருத்துவமனையும் வழங்கியதாக அரசாங்கத்தின் மரண விசாரணை அதிகாரி ஆடம் நக்கோடா தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தமது இல்லத் துணையான திருவாட்டி லிம் சோய் மோயைக் கொன்ற பின்னர் திரு பாக்கின் குடும்பத்தினர் அவருடனான தொடர்பைத் துண்டித்து, விலகிச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தோ பாயோவில் உள்ள வீவக வீடு ஒன்றில் அறையைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஏற்பட்ட தகராற்றில் அந்த 79 வயது மாதை அவர் அரிவாளால் வெட்டிக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த வழக்கில் 2023 மே மாதம் தீர்ப்பளித்த நீதிபதி, “அந்தக் குற்றச் சம்பவம் விவரிக்க இயலாத அளவுக்குக் கொடூரமானது, மூர்க்கத்தனமானது, திட்டமிடப்பட்டது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
1950களில் பதின்ம வயதில் சந்தித்து உறவை ஏற்படுத்திக்கொண்ட அந்த இருவருக்கும் நான்கு பிள்ளைகள் பிறந்தபோதிலும் அவ்விருவரும் மணமுடித்துக்கொள்ளவில்லை.

