சாங் யுன் சியா என்னும் 40 வயது ஆடவர் மூன்று நபர்களுடன் இணைந்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் உள்ள மேலாண்மை இயக்குநர் ஒருவருக்கு 88,000 வெள்ளிக்கும் அதிகமாக லஞ்சம் கொடுத்துள்ளனர்.
சியா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால அவருக்கு 4 மாதங்களுடன் 10 வார சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 38,174 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சியா மலேசியர் என்றும் , அவர் கேகே அயன் எஞ்ஜினியரிங் என்னும் கட்டுமான நிறுவனத்தில் திட்ட மேலாளராக வேலை செய்து வந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆடவர் தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் கடந்த மே மாதம் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு புதன்கிழமை தண்டனை விதிக்கப்பட்டது.
லஞ்சம் கொடுத்த சம்பவம் 2016ஆம் ஆண்டு நடந்துள்ளது. நான்கு முறை விலங்கியல் தோட்டத்தின் மேலாண்மை இயக்குநருக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக ரீதியாக ஒப்பந்தங்களை பெற சியாவும் அவரது கூட்டாளிகளும் லஞ்சம் வழங்கியுள்ளனர். லஞ்சம் மூலம் 1 மில்லியனுக்கும் மேலான ஒப்பந்தங்களை கேகே அயன் எஞ்ஜினியரிங் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த லஞ்ச நடவடிக்கையால் விலங்கியல் தோட்டத்திற்கு 88,000 வெள்ளிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

