தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 890 மின்சிகரெட்டுகள், 6,700 கருவிகள் சிக்கின

1 mins read
மலேசிய வேன் ஓட்டுநர் கைது
57d458c0-a5a0-4cb5-87d1-5bfd03af9674
மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வேனிலிருந்து கைப்பற்றப்பட்ட மின்சிகரெட்டுகளும் மின்சிகரெட் சாதனங்களும். - படம்: குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம்/ஃபேஸ்புக்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 890க்கும் அதிகமான மின்சிகரெட்டுகளும் அது தொடர்பான 6,700 சாதனங்களும் வாகனம் ஒன்றில் சிக்கியதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

அச்சம்பவம் தொடர்பாக அந்த வாகனத்தின் ஓட்டுநரான மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் அது இன்று (ஆகஸ்ட் 28) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

ஆணைய அதிகாரிகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 27) முற்பகல் 11 மணியளவில் சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வேன் ஒன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு வந்தது.

குளிரூட்டும் சாதனங்களையும் அதன் உதிரிபாகங்களையும் சோதிப்பதற்காக சிங்கப்பூருக்கு அந்த வாகனம் அவற்றைக் கொண்டு வந்தது.

அதிகாரிகள் நடத்திய முதல் சோதனையில் வேனுக்குள் இருந்த பெட்டிகளில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்த மின்சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

சோதனையை அதிகாரிகள் விரிவாக்கியபோது, குளிரூட்டும் சாதனங்களுக்குள்ளும் வேனின் பிற பகுதிகளிலும் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மின்சிகரெட்டுகளும் அது தொடர்பான சாதனங்களும் சிக்கின.

சோதனைக்குத் துணைபுரிய காவல்துறையின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

பின்னர், கூடுதல் விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் அந்தச் சம்பவம் ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையில், மின்சிகரெட் பயன்பாட்டுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போதைப்பொருள் சம்பவமாக அது கருதப்பட்டு, கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.

குறிப்புச் சொற்கள்