நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) ஆய்வாளராக இருந்த மாது ஒருவருக்கு, அங்கு முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த ஆடவர் அறிமுகமானார்.
ஹான் சியாவ்பிங், 34, அந்த 29 வயது ஆடவரை விரும்பத் தொடங்கினார். இருப்பினும், அந்த ஆடவர் மாதின் செயல்களைப் புறக்கணித்தார்.
சென்ற ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி சீனாவைச் சேர்ந்த அந்த மாதிற்கு எதிராக, அந்த ஆடவர் பாதுகாப்பு ஆணையைப் பெற்றார். அதன் மூலம், அவரைத் தொடர்புகொள்வது, அவர் சென்ற இடங்களுக்குச் செல்வது போன்ற செயல்களைப் புரிய அந்த மாதிற்கு அனுமதி கிடையாது.
பாதுகாப்பு ஆணை விதிக்கப்பட்டபோதும், ஹான் சென்ற ஆண்டு டிசம்பர் வரை அவருக்கு மொத்தம் 116 மின்னஞ்சல்களை அனுப்பினார். அவர் அந்த ஆடவரின் வேலையிடத்திற்கும் சென்றார்.
ஆகஸ்ட் 21ஆம் தேதி இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட பின்னர், அவருக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆடவரின் விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
ஹானுக்காக வாதாட, வழக்கறிஞர் இல்லை. தற்போது தாம் வேலை செய்யவில்லை என்று ஹான் நீதிமன்றத்தில் கூறினார்.
அந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால், ஹான் எட்டு வாரங்கள் சிறையில் இருக்கவேண்டும்.