வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை சென்ற ஆண்டு (2024) 9.7 விழுக்காடு உயர்ந்த நிலையில் இந்த ஆண்டும் இதே நிலைமை தொடருமென ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்ற ஆண்டின் விலை உயர்வு, அதற்கு முந்தைய ஆண்டு பதிவான 4.9 விழுக்காட்டு வளர்ச்சியைவிட மிக அதிகம்.
இருப்பினும், சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டில் மறுவிற்பனை வீட்டு விலை 2.6 விழுக்காடு என்ற விகிதத்தில் மெதுவான வளர்ச்சி கண்டது. சென்ற ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அது 2.7 விழுக்காடாகப் பதிவானது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே மறுவிற்பனை வீடுகள் கைமாறின. மூன்றாம் காலாண்டில் 8,142 மறுவிற்பனை வீடுகள் விற்பனையாயின. ஒப்புநோக்க, நான்காம் காலாண்டில் அந்த எண்ணிக்கை 6, 424ஆகப் பதிவானது. இந்த விகிதம் 21.1 விழுக்காடு குறைவாகும்.
ஒட்டுமொத்தத்தில் சென்ற ஆண்டு முழுவதும் விற்கப்பட்ட மறுவிற்பனை வீடுகளின் விகிதம் அதற்கு முந்தைய ஆண்டைவிட 8.4 விழுக்காடு அதிகம். 2024ல் அந்த எண்ணிக்கை 28,986ஆகவும் 2023ல் 26,735ஆகவும் பதிவானது.
காலாண்டு அடிப்படையிலான மறுவிற்பனை வீடுகளின் விலை, 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து தொடர்ந்து அதிகரித்துவந்துள்ளது.
இந்த ஆண்டு குறைவான புதிய வீடுகளே உரிமையாளர் கட்டாயம் தங்கவேண்டிய காலகட்டத்தை (MOP) நிறைவுசெய்வதால், மறுவிற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று சொத்துச்சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். புதிதாக விற்பனைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கும் என்று அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் மறுவிற்பனை வீட்டு விலை அதிகரித்ததற்கு, வலுவான தேவையும் சந்தையில் புதிதாக விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததும் காரணம் என்று வீவக கூறியது.

