பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது

பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது

2 mins read
f36410d6-eda5-4481-b9a6-e67f968646ba
முகம்மது அலிஃப் முகம்மது, சையது முகம்மது நஸ்மி சையது அப்துல்லா, முகம்மது ரிஸால் செனின் ஆகிய மூன்று ஆடவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 1800-255-0000 என்ற நேரடி அழைப்பு எண் அல்லது www.police.gov.sg/i-witness எனும் இணையப்பக்கம் வழியாகத் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. படம்: காவல்துறை -

சட்டவிரோதமாகக் கூடி, பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 8ஆம் தேதி இரவு 11.45 மணியளவில் அடுக்குமாடி கார்நிறுத்த இடம் ஒன்றில் நிகழ்ந்த சண்டை குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

ரெட்ஹில், ஜாலான் ரூமா திங்கி, புளோக் 37Aவில் அமைந்துள்ள அந்த கார்நிறுத்த இடத்தில் இரு கும்பல்கள் மோதிக்கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் பின்னர் சண்டையாக மாறியது.

விசாரணை மூலமாகவும் காவல்துறைக் கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காட்சிகளின் துணையுடனும் அந்த ஆடவர்கள் அடையாளம் காணப்பட்டு, ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சண்டையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ரொட்டி வெட்டும் மூன்று கத்திகளும் விரல்முட்டிக்காப்பானும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டன.

அந்த ஒன்பது பேரில் ஒருவரான 43 வயது இர்வாந்தோ அப்துல்லாமீது செவ்வாய்க்கிழமை (ஜனவரி 17) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அவரை நான்கு நாள்கள் விசாரணைக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் 20ஆம் தேதி மீண்டும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

இதே குற்றத்திற்காக 22 முதல் 59 வயதிற்குட்பட்ட நான்கு ஆடவர்கள்மீது கடந்த 10-14 தேதிகளுக்கு இடையே குற்றம் சுமத்தப்பட்டது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

முகம்மது அலிஃப் முகம்மது, சையது முகம்மது நஸ்மி சையது அப்துல்லா, முகம்மது ரிஸால் செனின் ஆகிய மூன்று ஆடவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 1800-255-0000 என்ற நேரடி அழைப்பு எண் அல்லது www.police.gov.sg/i-witness எனும் இணையப்பக்கம் வழியாகத் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.