நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சேவையாற்ற ஒன்பது பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுள் தேசியப் பல்கலைக்கழக மருந்தகங்கள் குடும்ப மருத்துவர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜும், பொதுச் சேவை ஊழியர்களின் ஒருங்கிணைந்த தொழிற்சங்கப் பொதுச் செயலாளரும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் மத்தியக் குழு உறுப்பினருமான சஞ்சீவ் குமார் திவாரியும் அடங்குவர்.
எனர்கான் ஏஷியா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் அசார் பின் ஒத்மான், சிங்கப்பூர் அக்வாட்டிக்ஸ் தலைவர் இணைப் பேராசிரியர் கென்னத் கோ டோ சுவான், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கல்வி, பல்கலை நிர்வாகி இணைப் பேராசிரியர் டெரன்ஸ் ஹோ வெய் லுவென், லீகல் கிளினிக் எல்எல்சி நிர்வாக இயக்குநர் குவா பூன் தெங், சிங் லன் ஹோல்டிங்ஸ் தலைமை நிர்வாகி மார்க் லீ கியென் ஃபீ, நியோே ஏரோனாட்டிக்ஸ் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான டாக்டர் நியோ கொக் பெங், தேசியக் கல்விக் கழகப் பேராசிரியர் கென்னத் பூன் கின் லூங் ஆகியோர் மற்ற எழுவர்.
வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த இந்த ஒன்பது பேரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சேவையாற்றுவர்.
நாடாளுமன்றத்தில் நியமிக்கப்படுவது மிகப் பெரிய பொறுப்பு என்ற 35 வயது குடும்ப மருத்துவர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு, பல்வேறு விவகாரங்களை முன்வைக்க விரும்புவதாகத் தமிழ் முரசிடம் குறிப்பிட்டார்.
அடிப்படைப் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு, இளம் குடும்பங்களுக்கான நிதியாதரவு, ஆதரவு, சிறுபான்மையினர் முன்னேற்றம் ஆகியவற்றுக்கான வழிகளை ஆராய விரும்புவதாக டாக்டர் ஹரேஷ் தெரிவித்தார்.
தெம்பனிஸ் அடித்தளக் குழுவில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் தொண்டூழியராகச் சேவையாற்றியபோது மக்களின் குறைகளை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது என்றார் இவர்.
அந்த அனுபவம் தமது பொறுப்பைச் சரிவர மேற்கொள்ள துணைபுரியும் என்று டாக்டர் ஹரேஷ் நம்புகிறார்.
தொடர்புடைய செய்திகள்
தொழிற்சங்கத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சேவையாற்றிய 47 வயது திரு சஞ்சீவ் குமார் திவாரி, மூத்த ஊழியர்களின் வேலைவாய்ப்பை வலுப்படுத்த கொள்கை அளவில் இன்னும் கூடுதல் மாற்றங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
நியமன நாடாளுமன்ற உறுப்பினராக இதற்குமுன் சேவையாற்றிய திரு லீயைத் தவிர மற்ற எட்டுப் பேரும் முதன்முறையாக நியமிக்கப்படுகின்றனர்.
திரு லீ 2023ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டுவரை நியமன நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் புதிய நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்மாதம் 8ஆம் தேதி இஸ்தானாவில் அதிகாரபூர்வ நியமனக் கடிதங்களை வழங்குவார்.
நாடாளுமன்றம் இம்மாதம் 12ஆம் தேதி கூடும்போது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று, உறுதிமொழி எடுத்துக்கொள்வர்.
நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு மொத்தம் 57 பெயர்கள் முன்மொழியப்பட்டன.
தேர்வுசெய்யப்பட்ட ஒன்பது உறுப்பினர்களும் அரசமைப்பு தகுதிகளைப் பூர்த்திசெய்தனர் என்றும் நாடாளுமன்ற விவாதங்களின்போது பலவிதங்களில் பங்களிப்பர் என்றும் நம்புவதாக நாடாளுமன்ற நாயகர் சியா கியென் பெங் கூறியுள்ளார்.
புதிய உறுப்பினர்கள் தங்கள் பணியிலும் சமூகத்திலும் துறையிலும் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்துள்ளனர் என்று அவைத் தலைவர் குமாரி இந்திராணி ராஜா குறிப்பிட்டார்.

