மனிதவள அமைச்சு கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களில் 95 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூரின் வேலை, வாழ்விடச் சூழல் குறித்து மனநிறைவு தெரிவித்து உள்ளனர்.
‘மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர் அனுபவ ஆய்வு’ என்னும் அந்த ஆய்வின் முடிவுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) வெளியிடப்பட்டன.
சிங்கப்பூரில் வேலை, வாழ்விடச் சூழல் மனநிறைவைத் தருவதாக 95.3 விழுக்காட்டினர் கூறினர். 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அது 86.3 விழுக்காடாக இருந்தது.
மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர் மனநிலையை அறிந்துகொள்ள 2011ஆம் ஆண்டு ஆய்வு தொடங்கப்பட்டது முதல் இப்போது பதிவாகி உள்ள மனநிறைவு விகிதமே ஆக அதிகம்.
2024ஆம் ஆண்டு ஆய்வில் பங்கேற்றவர்களில் 96.7 விழுக்காட்டினர் தாங்கள் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்ய விரும்புவதாகவும் ஊர்திரும்பினாலும் வருங்காலத்தில் சிங்கப்பூருக்கு வர விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இந்த விகிதம் 2018ல் 91.9 விழுக்காடாக இருந்தது.
மேலும், வேலை செய்வதற்கு ஏற்ற இடம் சிங்கப்பூர் என்பதை மற்றவர்களிடம் பரிந்துரைக்க இருப்பதாக 92.3 விழுக்காட்டு வெளிநாட்டு ஊழியர்கள் கூறியுள்ளனர். இது இதற்கு முன்னர் 84 விழுக்காடாக இருந்தது.
அதற்காக அவர்கள் தெரிவித்த காரணங்களில் ஐந்து காரணங்கள் முக்கியமானவை.
தொடர்புடைய செய்திகள்
முதலாவது, பாதுகாப்பான வேலையிடச் சூழல். 84.4 விழுக்காட்டினர் அதனைக் குறிப்பிட்டனர்.
அடுத்தடுத்த காரணங்களாக, அதிக சம்பளம் (71.2 விழுக்காடு), போதுமான ஊழியர் பாதுகாப்பு (65.2 விழுக்காடு), சிறந்த வாழும் சூழல் (46 விழுக்காடு), நிலையான வேலை (44.1 விழுக்காடு) ஆகியவற்றை அவர்கள் வரிசைப்படுத்தினர்.
அத்துடன், வேலை தொடர்பான விவகாரங்களுக்காக அமைச்சை நாடுவது எளிதாக இருப்பதாக 89.3 விழுக்காட்டினர் கூறினர். இதற்கு முன்னர் அது 82.8 விழுக்காடாக இருந்தது.
இவற்றை எல்லாம்விட, வேலையிடம் மீது ஊழியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மிகவும் வலுவானதாக ஆய்வில் தெரியவந்தது. 99.5 விழுக்காட்டினர் அவ்வாறு நம்பிக்கை தெரிவித்தனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள், வேலை செய்வதற்குப் பொருத்தமான இடம் சிங்கப்பூர் என்னும் நம்பிக்கை தொடர்ந்து நீடிப்பதை பிரதிபலிப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
“ஊழியர்களிடையே நிலவும் மனநிறைவு, மனிதவள அமைச்சின் ஒழுங்குவிதிகளின் மீது அவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நம்பிக்கையும் ஊக்கம் அளிப்பவையாக உள்ளன,” என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
முதலாளிகளிடமும் ஆய்வு
வெளிநாட்டு ஊழியர்களிடம் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆய்வு, கடந்த ஆண்டு அவர்களின் முதலாளிகளிடம் முதல் தடவையாக நடத்தப்பட்டது.
தரமான வெளிநாட்டு ஊழியரைப் பெற்றிருப்பதாக 70.8 விழுக்காட்டு முதலாளிகள் கூறினர். 27.8 விழுக்காட்டினர் நடுநிலையாகக் கருத்துச் சொன்ன அதே நேரம், 1.4 விழுக்காட்டு முதலாளிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

