தேசியக் கூடைப்பந்து லீகில் ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயித்த சந்தேகத்தில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
19 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட அவர்களில் எட்டுப் பேர் சிங்கப்பூரர்கள். ஒருவர் நிரந்தரவாசி. லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) அந்தத் தகவலை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) தெரிவித்தது.
கைதானோரில் ‘2025 கே ஸ்டார் தேசியக் கூடைப்பந்து லீக்’ முதல் பிரிவுப் போட்டிகளில் பங்கெடுக்கும் ஆட்டக்காரர்களும் அடங்குவர்.
தகாவாவுக்கும் தோங் வாய்க்கும் ஆகஸ்ட் முதல் தேதி நடைபெற்ற ஆட்டத்தின் முடிவு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணை நடைபெறுவதாகவும் ஊழல் அறவே கூடாது என்னும் அணுகுமுறையைப் பின்பற்றுவதாகவும் லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
“ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க எவரேனும் லஞ்சம் கொடுத்தாலோ வாங்கினாலோ தர முன்வந்தாலோ கடும் நடவடிக்கை எடுப்பதற்கு சிபிஐபி தயங்காது,” என்றும் அது கூறியது.
லீகின் முதல் பிரிவில் 10 குழுக்கள் உள்ளன. ஆட்டங்கள் இம்மாதம் (ஆகஸ்ட்) 30ஆம் தேதி வரை தொடரும்.
முதல் மூன்று நிலைகளில் வரும் குழுக்களுக்கு ரொக்கப் பரிசாக முறையே 4,000 வெள்ளி, 2,000 வெள்ளி, 1,000 வெள்ளி வழங்கப்படும்.


