புக்கிட் பாஞ்சாங் வீட்டில் தமது மனைவியைக் கொன்ற 90 வயது முதியவரின் மனநிலை தற்போது விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
2024 ஜூன் 5ஆம் தேதி, மறதிநோயால் பாதிக்கப்பட்ட அப்போது 88 வயதான முதியவர், 74 வயது மனைவியைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார். அந்தத் தாக்குதலில் அவரது மனைவியின் தாடை உடைந்து, விலா எலும்புகள், நுரையீரல்கள் வெளியே தெரியும் அளவுக்கு ஆழமான காயம் ஏற்பட்டது என்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று பெட்டிர் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்குக் காவல்துறையினர் சென்றபோது, ரிடாவி மொர்சுடின் என்ற அந்த முதியவர் குழப்பமான நிலையில் சரியாகப் பேச முடியாமல் இருந்தார். அன்றைய தினம் அவரைப் பரிசோதித்த மருத்துவரும் அவர் தடுமாற்றமான மனநிலையில் இருந்ததாகவும் என்ன நடந்தது என்பது பற்றி அவரால் கூற முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
அந்த வீட்டில் இருந்த இரண்டு கத்தரிக்கோல்களிலும், ரிடாவி அணிந்திருந்த டி-சட்டையிலும் அவரது மனைவியின் ரத்தக்கறை படிந்திருந்தது.
தற்போது 90 வயதாகும் ரிடாவி, குற்றச்சாட்டை எதிர்கொள்ளத் தகுதியற்றவர் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோ யோங் ஙீ திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது, இத்தகைய தனிநபர்களுக்கான சட்ட நடைமுறையின்கீழ் உயர் நீதிமன்றத்திற்கு வந்துள்ள முதல் வழக்காகும்.
இந்த நடைமுறையின்கீழ், குற்றம்சாட்டப்பட்டவர் உண்மையில் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க இயலாத நிலையில் உள்ளாரா என்பதை நீதிபதிதான் தீர்மானிக்க வேண்டும்.

