ஹஜ்ஜுப் புனிதப் பயணத்திற்கு 900 முஸ்லிம் யாத்திரிகர்களும் புறப்பட்டுள்ளனர்: முயிஸ்

ஹஜ்ஜுப் புனிதப் பயணத்திற்கு 900 முஸ்லிம் யாத்திரிகர்களும் புறப்பட்டுள்ளனர்: முயிஸ்

1 mins read
90af8906-c54f-4c4e-b83d-38bc9f15d79c
300 யாத்திரிகர்கள் அடங்கிய இறுதிக் குழு வியாழக்கிழமை (மே 14) சவூதி அரேபியாவின் மதீனா நகருக்குப் புறப்பட்டுள்ளது. - படம்: முயிஸ்
Google News Preferred Icon

வருடாந்தர ஹஜ்ஜுப் புனிதப் பயணத்திற்கு சிங்கப்பூரிலிருந்து அனைத்து 900 முஸ்லிம் யாத்திரிகர்களும் புறப்பட்டுள்ளனர்.

300 பேர் அடங்கிய இறுதிக் குழு வியாழக்கிழமை (மே 14) சவூதி அரேபியாவிலுள்ள மதீனா நகருக்குப் புறப்பட்டதாக முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்தது.

“சவூதி அரேபியாவை ஏற்கெனவே பாதுகாப்பாகச் சென்றடைந்துள்ள 600 யாத்திரிகர்களுடன் அவர்கள் சேர்ந்துகொள்வார்கள்,” என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் கூறினார்.

சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்திலிருந்து இறுதிக் குழுவினர் வியாழக்கிழமை புறப்பட்டனர். இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம், சென்ற ஆண்டு மே மாதத்தில் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரது முதல் ஹஜ்ஜுப் பயணக் குழுவினரை வழிநடத்தி, யாத்திரிகர்களுடன் சவூதி அரேபியா செல்கிறார்.

சிங்கப்பூரிலிருந்து மதீனாவுக்கு மூன்று நேரடி விமானப் பயணங்களை ஏற்பாடு செய்ய, சவூதியா (Saudia) விமான நிறுவனத்துடன் முயிஸ் அணுக்கமாகப் பணியாற்றியதாக இணைப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.

ஏற்பாடுகளில் உதவியதற்காக, சிங்கப்பூரில் உள்ள சவூதி அரேபியத் தூதருக்கும் சவூதி தூதரகம், ஹஜ்ஜு, உம்ராவுக்கான சவூதி அமைச்சு ஆகியவற்றுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

நல்வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்த சிங்கப்பூரர்களிடமும் இணைப் பேராசிரியர் பைஷால் நன்றி கூறினார்.

முன்னதாக, மே 9, 12ஆம் தேதிகளில் புறப்பட்ட யாத்திரிகர்கள் அடங்கிய இரண்டு குழுவினர் தற்போது மதீனாவையும் மக்காவையும் சென்றடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்