சிங்கப்பூரை விட்டு வெளியேறி, தேசிய சேவை கடமையை நிறைவேற்றத் தவறிய ஒருவருக்கு வியாழக்கிழமையன்று (ஜூன் 25) $9,000 அபராதம் விதிக்கப்பட்டது.
23 வயதான யூ ஜியாஹாவோ, நாட்டை விட்டு வெளியேறும் அனுமதி இல்லாமல் சிங்கப்பூருக்கு வெளியே தங்கியிருந்த இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
தேசிய சேவைக்குப் பதிவு செய்யத் தவறிய மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் தண்டனை வழங்கும்போது கருத்தில் கொள்ளப்பட்டன.
அந்த சீன நாட்டவர், தனது 11 வயதில், 2014 ஜனவரியில் நிரந்தரவாசத் தகுதி பெற்றார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் ஓர் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
2020 ஆகஸ்ட்டில், யூ சிங்கப்பூரை விட்டு வெளியேறினார். 2021 ஏப்ரல் 8ஆம் தேதியன்று, அவரது முகவரிக்கு ஒரு பதிவு அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதில், 2021 மே 31ஆம் தேதிக்குள், தனது தேசிய சேவைப் பதிவை நிறைவு செய்வதற்காக தேசிய சேவை இணையத்தளத்தில் உள்நுழையுமாறு கேட்கப்பட்டிருந்தது.
இருப்பினும், யூ பதிவு செய்யவில்லை. அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டதை அதிகாரிகள் கண்டறிந்தபோது, 2021 ஆகஸ்ட்டில் அவருக்கு எதிராக ஒரு காவல்துறை எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
ஜூலை 13, 2022 அன்று, யூ, மறுநுழைவு அனுமதியைப் புதுப்பிக்க உதவுமாறு மத்திய ஆள்பலத் தளத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினார்.
மத்திய ஆள்பலம், 2022 ஜூலை 26ஆம் தேதி, அவரது மின்னஞ்சலுக்குப் பதிலளித்தது. அதில், தேசிய சேவைக்குப் பதிவு செய்யத் தவறியதாலும், வெளியேறும் அனுமதி இல்லாமல் சிங்கப்பூருக்கு வெளியே தங்கியிருந்ததாலும், அவர் ஒரு குற்றத்தைப் புரிந்துள்ளார் என்று அவருக்குத் தெரிவித்தது.
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், 2022 ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று, அவரது நிரந்தரவாசத் தகுதியை ரத்து செய்தது. அதன்படி, அவர் இனி தேசிய சேவையாற்ற தேவையில்லை என்பதாகும்.
2025 மார்ச்சில் அவர் சிங்கப்பூருக்குத் திரும்பியபோது, சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

