லிம் சூ காங் லேனில் சட்டவிரோதமாகக் குப்பை போட்ட ஆடவருக்கு $9,000 அபராதம்

லிம் சூ காங் லேனில் சட்டவிரோதமாகக் குப்பை போட்ட ஆடவருக்கு $9,000 அபராதம்

கோப்புப் படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

20 Sep 2024 - 6:59 pm

1 mins read

மீன் தொட்டிகளை இடமாற்ற உதவும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு, லிம் சூ காங் லேனில் சட்டவிரோதமாகக் குப்பை போட்டதன் தொடர்பில் $9,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொருள்களை ஏற்றி, இறக்க உதவும் மரச்சட்டங்களால் ஆன 25 சாதனங்களையும் 20 மரப் பெட்டிகளையும் பிரித்து வீசியதற்காக செப்டம்பர் 17ஆம் தேதி முகமது அர்ஷாத் பின் முகமது அயூப்பிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தேசிய சுற்றுப்புற வாரியம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், சுற்றுப்புறப் பொதுச் சுகாதாரச் சட்டத்தின் திருத்தப்பட்ட பிரிவு 20(1)ன்கீழ் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் பொருள்களைக் குவிப்பது, குப்பைகளை வீசுவதை இச்சட்டப் பிரிவு தடுக்க உதவுகிறது.

2023ஆம் ஆண்டு ஜூலையில் நடப்புக்கு வந்த இதன்கீழ், இவ்வாறு குப்பை வீசக் காரணமாக இருந்தவரையும், அனுமதித்தவரையும் தண்டிக்க முடியும். அதற்குமுன் குப்பை வீசியவர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க இயலும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்அபராதம்குப்பை