ஃபேர்பிரைஸ் பேரங்காடிக் கிளைகளில் ஆள்மாறாட்டம் மூலம் மோசடி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் குறைந்தபட்சம் 12 ஆள்மாறாட்ட மோசடிகள் பற்றி காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
அந்த மோசடிகளில் சிக்கியோர் குறைந்தபட்சம் $9,000 பணத்தை இழந்துள்ளதாக காவல்துறை வியாழக்கிழமை (செப்டம்பர் 5) தெரிவித்தது.
மேலும், அதுபோன்ற மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை அண்மைய காலங்களில் அதிகரித்து வருவதாகவும் அது எச்சரித்தது.
ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் சில பொருள்களுக்கு விலைக்கழிவு அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் வெளியான விளம்பரங்களைப் பார்ப்போர் அது மோசடி என்று தெரியாமல் சிக்குகின்றனர்.
விளம்பரத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் இணைப்பை அல்லது பதிவைச் சொடுக்குவோர் போலி இணையத்தளத்திற்குக் கொண்டு செல்லப்படுவர்.
விலைக்கழிவுள்ள பொருள்களை விநியோகம் செய்வதற்கான முகவரி, அவற்றை வாங்குவதற்கான வங்கிக் கணக்கு விவரங்கள், ஒருநேர மறைச்சொல் ஆகியவற்றைத் தெரிவிக்குமாறு அந்த இணையத்தளம் கேட்டுக்கொள்ளும்.
வங்கி அட்டையில், அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் இடம்பெற்றதை அறிந்த பின்னரே தாங்கள் மோசடியில் சிக்கியதை பொதுமக்கள் உணர்வர் என்று காவல்துறை விளக்கியது.
தொடர்புடைய செய்திகள்
தனது பொருள்களுக்கான விலைச் சலுகை பற்றி www.fairprice.com.sg என்னும் தனது இணையத்தளம் அல்லது தனது சமூக ஊடக அதிகாரத்துவத் தளம் ஆகியவற்றில் சரிபார்க்குமாறு ஃபேர்பிரைஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.