மறுவாழ்வுப் பயிற்சியில் 92.9% நிறைவு; எனினும் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை உயர்வு

‘இளையர் மறுவாழ்வு ஆதரவின் போக்குகள் அறிக்கை’ 2026 வெளியீடு

மறுவாழ்வுப் பயிற்சியில் 92.9% நிறைவு; எனினும் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை உயர்வு

தகவல்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வரைகலை: ஹஃபிஸா ஐனி

29 Sep 2026 - 6:02 pm

3 mins read

சிங்கப்பூரில் இளையர்களிடையே குற்றச் செயல்களில் ஈடுபடும் போக்கு கடந்த 2025ம் ஆண்டில் மீண்டும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.

2026ஆம் ஆண்டிற்கான ‘இளையர் மறுவாழ்வு ஆதரவின் போக்குகள் அறிக்கை’யை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) வெளியிட்டது சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு.

மறுவாழ்வுத் திட்டங்களை குற்றவாளிகள் வெற்றிகரமாக நிறைவுசெய்தபோதும் மீண்டும் குற்றம் புரிவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக  அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அதன்படி, அமைச்சின் மறுவாழ்வுத் திட்டங்களில் தேர்ச்சி விகிதம் 85.0 விழுக்காடு முதல் 92.9 விழுக்காடு வரை என்ற அளவில் மிக உயர்வாக இருந்தபோதிலும், குற்ற விகிதமும், மீண்டும் குற்றம் புரியும் விகிதமும் ஒருசேர உயர்ந்துள்ளது

அமைச்சு வெளியிட்டுள்ள அந்த அறிக்கை 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு காலப் போக்குகளை அலசியது.

அதன்படி, கடந்த 2024ஆம் ஆண்டில் 1,000 இளையர்களுக்கு 4.8 ஆக இருந்த குற்ற விகிதம், 2025ல் 5.6 ஆக உயர்ந்துள்ளது. ஒப்புநோக்க இது 2021ல் பதிவான உச்சமான 5.8 என்ற விகிதத்திற்கு மிக அருகில் வந்துள்ளது. 

அதேவேளையில், 2022ஆம் ஆண்டின் இளையர்களிடையே 9.1 விழுக்காடு ஆக இருந்த மறுகுற்ற விகிதம், 2023ஆம் ஆண்டின் பிரிவினரிடையே 10.3 விழுக்காடாக உயர்ந்துள்ளதும் அக்கறைக்குரிய செய்தியாக உருவெடுத்துள்ளது.   

இந்த உயர்வு அனைத்து வயதுப் பிரிவினரிடமும், ஆண், பெண் இருபாலரிடமும் காணப்பட்டாலும், 16 வயது முதல் 18 வயதுக்குக் குறைவான இடைநிலை இளையர் பிரிவினர்,  மேலும் 18 முதல் 21 வயதுக்கு குறைவானவர்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மூத்த இளையர்கள் மத்தியில் தான் மிக அதிகமாக உள்ளது. 

வயதின் அடிப்படையில் மாறுபடும் குற்றங்கள்

குறிப்பாக, 16 முதல் 21 வயதுக்குட்பட்ட நடுத்தர மூத்த இளையர்களிடையே ஏமாற்று வேலைகள், நிதி முறைகேடுகள் இணைய மோசடிகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. 

இளையப் பிரிவினரான 10 முதல் 16 வயதுக்குட்பட்டோரிடையே திருட்டுச் சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. 

இதில் 16 வயதிற்குட்பட்ட சிறுமிகள் சம்பந்தப்பட்ட பாலியல் அத்துமீறல்கள் முதன்மையாக உள்ளன. மேலும், இளையர்கள் தங்களின் போன் சிம் கார்டுகளை மோசடி கும்பலிடம் பணத்திற்காக ஒப்படைக்கும் போக்கு அதிகரித்துள்ளதும் அமைச்சின் அறிக்கை விவரித்த உண்மை. 

அதே நேரத்தில், இளையர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு 1,000 பேருக்கு 0.5 என்ற அளவில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் அறிக்கை தெரிவித்தது.   

மறுவாழ்வுத் திட்டங்களின் சாதனை

ஒருபுறம் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், அரசின் நன்னடத்தை, மறுவாழ்வுத் திட்டங்களின் செயல்திறன் தொடர்ந்து வலுவாகவே நீடிக்கிறது எனவும் அறிக்கை பதிவுசெய்திருந்தது. 

இதற்கிடையே, இந்த நிலைமையைக் கையாள சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சும் உள்துறை அமைச்சும்  இணைந்து குற்றத் தடுப்பு , மறுவாழ்வுக்கான தேசியக் குழு மூலம் மூன்று முதன்மை உத்திகளைச் செயல்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

அதன்படி அபாயக் கட்டத்தில் இருக்கும் இளையர்களையும் அவர்களின் குடும்பங்களையும் ஆரம்பத்திலேயே கண்டறிதல், இணையப் பாலியல் குற்றங்கள், கடைத் திருட்டுகள் சிம் கார்டு துஷ்பிரயோகம் மூலமாக நடக்கும் பண மோசடிகள் குறித்து பள்ளிகள் சமூக அமைப்புகள் வாயிலாக விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்  உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாகக் களம்காணவுள்ளன.   

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களில் இருந்து அவர்களை மீட்டெடுக்கவும் அரசுத் துறைகளும் சமூக அமைப்புகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றும் என்று அமைச்சு உறுதியளித்துள்ளது.   

குறிப்புச் சொற்கள்
குற்றச்செயல்இளையர்சிங்கப்பூர்அறிக்கை