சிங்கப்பூருக்குள் மின்சிகரெட் சார்ந்த 9,200 பொருள்கள் கடத்தல்; ஆடவர் கைது

1 mins read
a27686d8-75b0-4ad4-8ff6-0b6ec353955a
சிங்கப்பூருக்குள் மின்சிகரெட் சார்ந்த 9,200 பொருள்களைக் கடத்தி வந்த 25 வயது ஆடவரை அதிகாரிகள் கைது செய்தனர். - படம்: காவல்துறை

சிங்கப்பூருக்குள் மின்சிகரெட் சார்ந்த 9,200 பொருள்களைக் கடத்தி வந்த 25 வயது ஆடவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

செப்டம்பர் 17ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் கடத்தி வரப்பட்ட மின்சிகரெட் சார்ந்த பொருள்கள் பிடிபட்டன.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) காவல்துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவை இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன.

கொள்கலன்கள் மூலம் சிங்கப்பூருக்குள் வந்த அந்த மின்சிகரெட் பொருள்களை, கைது செய்யப்பட்ட ஆடவர் மின்னூட்டிகள் (power banks) எனப் பொய்யாக ஆவணங்களில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து செப்டம்பர் 18ஆம் தேதி கடத்தலில் ஈடுபட்ட சிங்கப்பூரரை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும்போது ஆடவரிடம் மேலும் 85 மின்சிகரெட் சார்ந்த பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் பறிமுதல் செய்த பொருள்களின் சந்தை மதிப்பு 51,000 வெள்ளிக்கும் மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்குள் மின்சிகரெட் மற்றும் அதனைச் சார்ந்த பொருள்களை இறக்குமதி, விநியோகம் அல்லது விற்பனை செய்தால் 10,000 வெள்ளி வரையிலான அபராதம், ஆறு மாதம் வரையிலான சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

மீண்டும் மீண்டும் இதே தவற்றைச் செய்பவர்களுக்குத் தண்டனை அதிகரிக்கப்படும்.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்