ஜாலான் புசாரில் சிம் லிம் டவருக்கு அருகில் கனரக வாகனமும் டவர் டிரான்சிட் பேருந்தும் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து வியாழக்கிழமையன்று (ஜூன் 6) நிகழ்ந்தது.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் 39 வயதுக்கும் 93 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
54 வயது பாதசாரி ஒருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அந்த ஐவரும் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்த முதியவர் ஒருவர் தலையில் கட்டுடன் பேருந்தில் அமர்ந்திருந்ததைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஜாலான் புசாருக்கும் ஒஃபிர் சாலைக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் விபத்து நிகழ்ந்ததாகப் பிற்பகல் 1.45 மணி அளவில் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை கூறியது.
விபத்தின் காரணமாக சுங்கை ரோட்டை அடுத்துள்ள ஒஃபிர் சாலை மூடப்பட்டதாக பிற்பகல் 1.50 மணி அளவில் நிலப் போக்குவரத்து ஆணையம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
டவர் டிரான்சிட் பேருந்து எண் 857 விபத்துக்குள்ளானதாகப் பிற்பகல் 3.14 மணி அளவில் அந்நிறுவனம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதன் காரணமாகப் பேருந்து எண் 857, 980 ஆகியவற்றின் சேவைகள் பாதிக்கப்பட்டன.
அவை கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குத் தாமதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்து தொடர்பான படங்களும் காணொளிகளும் டெலிகிராம் தகவல் செயலில் காட்டுத் தீயைப் போல வேகமாகப் பரவின.
அந்த 17 வினாடிக் காணொளியில், கனரக வாகனத்தின் பின்பகுதியில் கட்டப்பட்டிருந்த உலோகக் கம்பிகள் மீது அந்தப் பேருந்தின் இடது பக்கம் மோதியதைப் பார்க்க முடிந்தது.
இதில் பேருந்தின் சன்னல்கள் உடைந்ததுடன் பேருந்து வலது பக்கமாகச் சற்று சாய்ந்தது.
ஆனால், பேருந்து தொடர்ந்து முன்னோக்கிச் சென்றபோது, கனரக வாகனத்தில் கட்டப்பட்டிருந்த உலோகக் கம்பிகளை அது கீழே இழுத்துவிட்டது.
விபத்தின் காரணமாகப் பேருந்தின் இடது பக்கம் சேதமடைந்தது.
பேருந்தின் கதவு, இடது பக்கத்தில் உள்ள சன்னல்கள் உடைந்தன.
பேருந்தின் இடது பக்கத்தில் பின் கதவுகளுக்கு மேல் உலோகக் கம்பி ஒன்று துளையிட்டுத் தொங்கிக்கொண்டிருந்தது.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.