சிங்கப்பூரின் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியிடம் சம்பளம் குறித்துப் புகார் அளித்த ஊழியர்களில் 94 விழுக்காட்டினர் தங்கள் சம்பளங்களை முழுமையாகப் பெற்றுகொண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வேலைவாய்ப்புத் தரநிலை அறிக்கையின்படி நான்கு விழுக்காட்டினர், பாதுகாப்புப் பத்திரங்கள் மூலமும் முக்கியக் குத்தகைத்தாரர்கள் மூலமும் சம்பளத்தில் ஒரு பகுதியைத் திரும்பப் பெற்றனர்.
இரண்டு விழுக்காட்டினர் மட்டும் சம்பளங்களைத் திரும்பப் பெறவில்லை. அவர்கள் பெரும்பாலோர் அதிக சம்பளம் வாங்குவோர் என்று மனிதவள அமைச்சு விவரித்தது.
சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி, வேலை சார்ந்த வழக்குகள் நடுவர் மன்றம் ஆகியவை உதவிசெய்தும் சம்பளத்தைத் திரும்பப் பெற முடியாமல் உள்ள 10 விழுக்காட்டு ஊழியர்களில் எத்தனை ஊழியர்கள் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்று மரின் பரேட்-பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டயானா பாங் லி யென் கேள்வி எழுப்பினார்.
அந்தச் சம்பளங்களை விரைவாகப் பெற்றுத்தர மனிதவள அமைச்சிடம் ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்றும் அவர் வினவினார்.
அதற்குப் பதிலளித்த மனிதவள அமைச்சு, குறிப்பிட்ட ஊழியர் ஒருவர் சம்பள விவகாரத்தை நீதிமன்றத்தில் பதிவுசெய்துவிட்டால் சட்டப்படி முதலாளிகள் அந்த விவகாரத்தை முடித்துவைக்கவேண்டும் என்று கூறியது.
உரிய நாளில் தங்கள் சம்பளத்தைப் பெறவில்லை என்றால் அதுகுறித்து முதலாளியிடம் பேசும்படி சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியை ஊழியர்கள் நாடலாம்.
மோசமான விவகாரங்களில் மனிதவள அமைச்சு நேரடியாகத் தலையிட்டு, முதலாளி சட்டத்தை மீறியுள்ளரா என்பது விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஊழியர்களுக்குச் சம்பளம் தராத முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படலாம், வேலை அனுமதிக்கு விண்ணப்பம் செய்யத் தடை விதிக்கப்படலாம் அல்லது நீதிமன்றத்திலும் முன்னிறுத்தப்படலாம் என்று அமைச்சு நினைவூட்டியது.

